Sunday, November 30, 2008

புயல் நிஷா, மின்வெட்டுகள், பழுதான தொலைபேசி இணைப்பு மற்றும் நட்சத்திர வாரம்.

அவசர சொந்த வேலை காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் அமேரிக்காவிலிருந்து, சென்னைக்கு(திருவள்ளூர்) வர நேர்ந்தது. இங்கு புயல் நிஷாவின் வருகையால், கடந்த ஒரு வாரமாகவே எட்டிப் பார்க்கத் துவங்கிய மழை, சென்ற ஞாயிறன்று வலுக்கத் தொடங்கியது. மேலும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள சிற்றூர் என்பதால் எப்போதும் சிலமுறை எட்டிப் பார்த்திருந்த மின்வெட்டு தனது வரவையும் இருப்பின் நீளத்தையும் கூட்டத் துவங்கியது. அதுவரை நன்றாக வேலை செய்திருந்த வீட்டுத் தொலைபேசியும், இணைய இணைப்பும் சென்ற சனிக்கிழமை முதல் தகராறு செய்யவும் ஆரம்பித்தன.

நவம்பர் 24 முதல் 30 வரையிலான வாரம் தமிழ்மணம் நட்சத்திரப் பதிப்பிற்கான வாரமென்பது கொஞ்சம் தவிப்பையும் கூட்டியது. இது தவிர்த்து, நட்சத்திர வாரம் துவங்கும் திங்களன்று, 'சுடர்விழி' என்ற பதிவரின் பதிவு தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டதும் கேள்விகளைக் கூட்டியது. தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை மாற்றிய பிறகு அறிமுகப் பதிவையும் பிற பதிவுகளையும் பதிக்க ஆரம்பித்தேன். மாறிமாறி வந்த மின்வெட்டுக்களும், விட்டுவிட்டு வேலை செய்த தொலைபேசி இணைப்புக்கும் நடுவில் திங்களன்றும் செவ்வாயன்றும் பதிக்க முயன்றது இன்னமும் மறக்கவில்லை.

செவ்வாயன்று, மிகக் குறைந்த அளவு நேரமே வேலை செய்த இணைய இணைப்பு, புதனன்று காலையில் முழுதும் படுத்துவிட்டது. கரையைக் கடக்க நிஷா முயன்று கொண்டிருந்ததால் எங்கும் பெரு மழை. அந்த மழையிலும், எனது மாமாவை, அருகிலுள்ள தொலைதொடர்புத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி, பொறியாளரைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு வரவழைத்து, கம்பத்திலிருந்து வீட்டிற்கு வரும் இணைப்பைச் சரிசெய்யச் சொன்னது ஒரு பெரிய கதை.

எழுத எண்ணி எழுதாமல் விட்ட சில தலைப்புகள், நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்,
1) கிட்மோ (குவண்டனமோ) என்னும் கொடுஞ்சிறை
2) வீடற்றவர்களின் தலைநகரம் அல்லது லாஸ் ஏஞ்சலஸ் எனவும் சொல்லலாம்
3) FDA-வின் உணவுப் பிரமிடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
4) நீங்கள் உடற்பயிற்சியிடமிருந்து தப்பிக்க முடியாது

இந்த மின்வெட்டு மற்றும் தொலைபேசி இணைப்புப் பழுதுகள் எனக்கு இன்னொரு விதமாக உதவத் துவங்கியது. பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு, பேனாவைக் கையிலெடுத்து எழுதும் பழக்கத்தை மறுபடியும் தூண்டியது, கட்டாயமாக்கியது. கணிணியிலேயே எழுத்துப் பலகையைத் தட்டிக் கொண்டும் யோசித்துக் கொண்டுமிருந்ததை விட, வெறும் தாளில் எழுதுவதிலுள்ள வசதியை இந்த நிகழ்வுகள் எனக்குச் சுவைக்கத் தந்தன. நிற்க.

எப்போதாவது ஒரு முறை வலையில் பதிக்கும் என்னை, மேலும் மேலும் படிக்க, 
எழுதத் தூண்டியது இந்த நட்சத்திர வாரம். 

மேலும், என் எண்ணத்தில் உள்ளதை நான் எழுத்தில் பதிப்பித்ததை பதிவுகளுக்கு வந்து படித்த அனைவருக்கும், நட்சத்திர பதிவராய் வாய்ப்பளித்த தமிழ் மண நட்சத்திர பதிவுகள் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள். 
வணக்கம்.





Saturday, November 29, 2008

'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!

புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே கேட்பவர் கண்டு மனம் மகிழ முடிவதில்லை.

பல காலமாய் என்னிடமிருந்த புத்தர் குறித்து புலவர்.தி.இராச கோபாலனார் தொகுத்த புத்தகத்திலிருந்து எழுத நினைத்திருந்தேன். அந்தப் புத்தகம் தற்போது கைவசம் இல்லையெனினும் அந்தப் புத்தகத்திற்கு மூலமாய் இருந்த
'பௌத்தமும் தமிழும்' என்ற தலைப்பில் தமிழாராயச்சியாளர் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமி எனபவரால் 1940-இல்
வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து சில தகவல் துளிகள்:-

முன்னுரையில் ஒரு பகுதி:
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த புத்தமதம், கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை உயர்நிலையிலிருந்து, கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் மறையத் துவங்கியது.

"வாசகர் இந்நூலில் தம் கொள்கைக்கு மாறுபட்ட கருத்தைக் கண்டால் அதன் பொருட்டு
எம்மீது சீற்றம் கொள்ளாமல், அஃது எம் ஆராய்ச்சி காட்டிய முடிபு எனக் கொள்வாராக. எந்த மதத்தையோ குறை கூற வேண்டுமென்பதோ எமது கருத்தன்று. உண்மையுணர வேண்டும் என்பதொன்றோ எம் கருத்து."

வரலாற்றில் புத்த மதம்:
பௌத்தம் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன.... இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன.

கி.பி.ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர். பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைனமதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ..

பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது...

பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்குகள் வசித்த மலைக் குகைகள், ஜைனக் குகைகளாக மாற்றப்பட்டன.

அகங்களர் என்னும் ஜைனர், கி.பி.எட்டாம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்க
ள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பிண்ணணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத் தொடங்கி ஜைன மதத்தை வீழ்த்தி உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான், பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

காஞ்சிபுரம் நகரும் புத்த மதமும்:

இந்த ஊர் தொன்று தொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு
நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக் காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோகச் சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவான்சுவாங் என்னும் சீன யாத்திரிகர் எழுதியிருக்கின்றார். இவர் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த பள்ளிகளும், ஆயிரம் பௌத்த பிக்ஷுக்களும் இருந்ததாக கூறுகிறார்.

நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தரும பாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள்.

இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம், பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக் கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.

புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றது.

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன. அவைகளில் ஆறடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட 'சாஸ்தா' ( இது புத்தர் உருவம் ) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை.

அய்யப்பனும் புத்த மதமும்:

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும் 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்த கோயில்களாக இருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பது 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம் எனவே 'சாத்தன் காவு' என்றால் புத்தரது தோட்டமென்பது பொருள்.

இந்து மதத்தில் பௌத்த மதக் கொள்கைகள்:-
தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்துவிட்டபோதிலும் அதன் பெரிய கொள்கைகளில் பல நாளிதுவரையில் இந்து மதத்தில் நன்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டை திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன.
 ஆதிசங்கரின் அத்வைதக் கொள்கையும் 'பிரசன்ன பௌத்தம்' என்று அறியப்பட்டதே.  அந்தக் காலத்தில் நடைமுறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது.

தமிழ் வரலாற்றில் புத்த மதம்:

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. மணிமேகலை, குண்டலகேசி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை.

வீரசோழியம், சித்தாந்தத்தொகை, திருப்பதிகம் மற்றும் விம்பசாரக் கதை ஆகிய நூற்கள் கிடைக்கப் பெறாவிடினும் அவை பற்றிய குறிப்புகள் மட்டும் உள்ளன.

புத்தகம் குறித்த அதிக தகவல்களுக்கு:- பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.  ( படித்ததில் பிடித்ததால் எழுதுவது தவிர்த்து எனக்கும் இந்த பதிப்பகத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)

Friday, November 28, 2008

ஆலிஸ் மல்சனியர் வாக்கர் (Alice Malsenior Walker)

"ஒரு போராளியாய் வாழ்வதே இந்த பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கான வாடகை" -
"Being an activist is the rent we pay for being on the planet"
- ஆலிஸ் மல்சனியர் வாக்கர்


ஆலிஸ் மல்சனியா வாக்கர் - இவர் அமேரிக்கக் கறுப்பினப் பெண் எழுத்தாளர், கறுப்பினருக்கான சம உரிமை, பெண்களுக்கான சம உரிமை, சுற்றுப்பற நலன் மற்றும் அடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் இவர். இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய பல கவிதைப் புத்தகங்களையும், கதைகள், சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் விமர்சனங்களை எழுதியவர், எழுதிக் கொண்டிருப்பவர்.

1982-இல் இவரெழுதிய 'தி கலர் பர்ப்பிள் (The Color Purple)' என்ற கதைப் புத்தகத்திற்கு, எழுத்துலகின் உயர் விருதான புலிட்சர் விருது (Pulitzer Prize) கிடைத்தது. அது படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது, நாடகமாக்கப்பட்டு இன்னமும் அமேரிக்க மேடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் அமேரிக்க புத்தக உலகில் அதிகம் பேசப்படுவரான இவரின் புத்தகங்கள் பெரிதும் விற்பனையாகின்றன.

1944 பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று அமேரிக்க ஜார்ஜியா மாநிலத்தில், கூலிக்கு பயிர்த்தொழில்
செய்துவந்த ஏழைக் கறுப்புக் குடும்பத்தில் எட்டாவதாகப் பிறந்த இவரின் வாழ்க்கையில் இவர் சந்தித்த போராட்டங்கள் அதிகம். எட்டு வயதில் வலது கண் பார்வையை இழந்த இவருக்குப் பின்னர் பதினாலு வயதில் அது சரிசெய்யப்பட்டும் முழுமையாகக் குணமாகவில்லை. பள்ளி வயதிலிருந்தே, கறுப்பர்களுக்கான சம உரிமை மற்றும் பெண்களுக்கான உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்ற ஆலிஸ், தனது எழுத்துக்களில் அந்த உரிமைப் போராட்டங்களை சுற்றியே எழுதினார்.


GRAY (
நரை) என்ற தலைப்பிட்டு இவரெழுதிய ஒரு கவிதையை தமிழாக்கி,
கருத்து கெடாமல் தர
முயன்றிருக்கிறேன், பிழையிருந்தால் மன்னிக்கவும்.
(இவர் குறித்து எழுத எண்ணி பல நாட்களுக்கு முன் துவங்கிய பதிவு இன்றுதான்
என்னால் முடிக்க முடிந்தது)

நரை

நரைக்கத் துவங்கியது
என் தோழியொருவளுக்கு.
நரை அவளின் முடிக்கு மட்டுமல்ல,
அது ஏனென்று தெரியவில்லை எனக்கு.

வைட்டமின் 'இ' குறைவா,
பி-12 தேவையா? அல்லது
சினங்கொண்ட வாழ்க்கையும்
தனிமையுமா?

யாரையேனும் நீ
நேசிக்க வேண்டுமென்றால்
எவ்வளவு நேரம் தேவையென்றேன்.
கண் சிமிட்டும் நேரமென்றாள்.

எவ்வளவு நாளைக்குப்
பிடித்திருக்குமென்றேன்,
'மிகப் பல மாதங்களுக்கு'
என்றாள் அவள்.

அவர்கள் உனக்குப்
பிடித்தவர்களாயிருப்பதை
மாற்றிக் கொள்ள
எவ்வளவு நாள் தேவைப்படுமென்று கேட்டேன்,
'மூன்று வாரங்கள்',
அதிகபட்சமென்றாள் அவள்.

நான் கேட்டேன்
எனக்கும் நரைக்கிறதென்று
உன்னிடம் சொன்னேனா?
நேசித்தல் பற்றி இதுபோல் எண்ணும்
அந்தப் பெண்ணை
நான் மயங்கி வியப்பதாலா?

(in her own words)
Gray

I have a friend
who is turning gray,
not just her hair,
and I do not know
why this is so.

Is it a lack of vitamin E
pantothenic acid, or B-12?
Or is it from being frantic
and alone?

'How long does it take you to love someone?'
I ask her.
'A hot second,' she replies.
'And how long do you love them?'
'Oh, anywhere up to several months.'
'And how long does it take you
to get over loving them?'
'Three weeks,' she said, 'tops.'

Did I mention I am also
turning gray?
It is because I *adore* this woman
who thinks of love
in this way.

----தொடர்புடைய சில இணைப்புக்கள்

Thursday, November 27, 2008

ஜார்ஜ் புஷ்ஷின் (இராக்) போர் மீது PBS காட்டிய வெளிச்சம்!

Public Broadcasting Corporation (PBS) எனும் அமேரிக்காவின் மக்கள் ஒளிபரப்பு நிறுவனம் பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பர். மக்களின் நன்கொடையாலும், பல தொண்டு நிறுவனங்களின் நிதி அளிப்பினாலும் மற்றும் பல தன்னார்வ ஊழியர்களின் பங்களிப்பாலும் வணிக நோக்கமின்றி மக்களுக்கு தகவல் தரும் நோக்கில் இது நடத்திவரப்படுகிறது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் அமேரிக்கத் தொலைக்காட்சிகளுக்காக பல பயன்தரத்தக்க நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.


PBS குழந்தைகள் மற்றும் சிறார்களுக்காக கற்றலுக்காகவும் அவர்களின் பொழுதுபோக்கிற்காகவும் பல நிகழ்ச்சிகளையும், கார்ட்டூன் படங்களையும் அளித்துவருகிறது. செசாமே ஸ்ட்ரீட் ('Sesame Street') மற்றும் டெலிடப்பீஸ் ('Teletubbies' ) ஆகியன அனைவரும் அறிந்த நிகழ்ச்சிகள். இது தவிர, மற்ற வயதுப் பிரிவினர்களுக்கான நிகழ்ச்சிகளையும், மக்களின் அறிவுத் தேவைக்கான அறிவியல், பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகளினை விமர்சித்தும் PBS அளிக்கும் நிகழ்ச்சிகள் அமேரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமானவை. பெரிதாய் மக்களினுடைய பணத்தால் நடத்தப்பெறுவதனால், மற்ற வணிக ஊடகங்களால் அளிக்க இயலாத அரசு மற்றும் வணிக உலக நடவடிக்கைகளை விமர்சித்துவரும் நிகழ்ச்சிகளை PBSஆல் வழங்கமுடியும்.

கடந்த மார்ச் மாதத்தில் (2008), புஷ் தொடுத்த இராக் போர் குறித்தும், அது புஷ் மற்றும் டிக் சேனி குழுவினரால் அமேரிக்க மக்களின் மீது திணிக்கப்பட்ட விதம் குறித்தும், 'மைக்கேல் கிர்க்' (Micheal Kirk) எனும் PBSஇன் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட 'புஷ்ஷின் போர்' (Bushs War) என்ற விவரணப் படம் ஊடகங்களின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.


அமேரிக்கா மீது 9/11 தாக்குதல் நடப்பதற்கு முன்னரே, புஷ் மற்றும் டிக் சேனி குழுவினருக்கு இராக்கை தாக்குவதற்கான தேவைகளும், அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததையும் இந்த விவரணப்படம் காட்டுகிறது, இரண்டாயிரத்தில் புஷ் ஆட்சிக்கு வந்தது முதல் அதற்கான காய்களை டிக் சேனி நகர்த்தியதையும், அந்தப் போருக்கு முழு பின்புலமாக இருந்தது குறித்து, அதிகாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் இருந்தவர்களின் பேட்டிகள் மற்றும் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் மைக்கேல் கிர்க். இது தவிர புஷ் மற்றும் சேனியின் பேச்சுக்கள் மற்றும் பேட்டிகளும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

மைக்கேல் கிர்க் அவர்களிடம் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வழியாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
கேள்வி: நீங்கள் ஏன் 'புஷ்ஷின் போர்' என்று பெயரிட்டுள்ளீர்கள்? அமேரிக்க மக்களவை ஒப்பதலளித்துத் தொடங்கப்பட்ட போரல்லவா இது? அரசியல் நோக்கத்துடனும் தனிமனிதர் ஒருவரை குறைகூறும் விதமாகவும் இது உள்ளதே. பொறுப்பான பத்திரிக்கையாளரின் குணமாக இல்லையே, நீங்கள் இன்னமும் தரமாக நடந்து கொண்டிருக்கலாமே?
மைக்கேல் கிர்க்: மன்னிக்கவும், அமேரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்டு அவர்கள் கூறியபடி, "நூறு சதவிகித அதிகாரமானது, நூறு சதவிகிதப் பொறுப்பை அளிக்கிறது. இராக் போருக்கான எல்லா முக்கிய முடிவுகளும் அதிபர் (புஷ்) அவர்களாலேயே எடுக்கப்படுகிறதென நான் நம்புகிறேன். மேலும் இந்தத் தலைப்பு, ஜார்ஜ் புஷ் சமாளிக்க வேண்டியிருந்த காலின் பவெல், டிக் சேனி, ஜார்ஜ் டீனட், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் கன்டலீசா ரைஸ் ஆகியோருக்கிடையான இன்னொரு போரையும் குறிக்குமென்று நம்புகிறேன்.

இந்தப் படம் 2000 முதல் 2007 வரையான காலகட்டத்தில் அமேரிக்க அரசு மற்றும்
அதிகாரத் தளங்களின் இராக் மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான நிகழ்வுகளையும், புஷ்ஷின் செயல்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஒரு புறம், வெளியுறவுத் துறை செயலர் காலின் பவெல், உளவுத்துறை இயக்குநர் ஜார்ஜ் டீனட் மற்றும் இன்னொரு புறம் துணை அதிபர் டிக் சேனி மற்றும் பாதுகாப்புச் செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டுமாக, கொள்கை மற்றும் செயல்பாடுகளில் இரு வேறு நிலைப்பாடுகளுடன் ஒருவரையொருவர் எதிர்க்கத் துவங்கினர். இராக்கைத் தாக்குவது குறித்தும், சிறைப்பிடிக்கப்பட்டவர்களை நடத்தும்விதம் குறித்தும், ஐ.நா. சபையை அணுகுவது மற்றும் சதாம் உசேனுக்கும் 9/11 தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதென உளவுத்துறை அறிக்கை தயாரிப்பது குறித்துமாக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களுடன் அவர்கள் இருந்தனர். ( புஷ்ஷின் 2004 தேர்தலுக்குப் பிறகு, பவெல், டீனட் மற்றும் ஆர்மிட்டேஜ் ஆகியோர் முழுதாய் வெளியேறி, சேனியின் குழுவினரே புஷ்ஷூடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).

புஷ்ஷின் முதல் நான்காண்டுகளில், வெளியுறவுத் துறை துணைச் செயலராக பதவியிலிருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், ஆட்சிக்குள் அதிகாரச் சண்டை வலுப் பெற்றபோது, தானும், காலின் பவெலும், அதிகாரத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பதிலிருந்து சேனி மற்றும் ரம்ஸ்பெல்டு ஆகியோரால் விலக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

PBS-இன் இணையத் தளத்தில் இந்த நான்கு மணி நேர விவரணப்படம் முழுமையாக காணக் கிடைக்கிறது. இணையம் வழியாக எளிதாக காணுமாறு, பத்து நிமிடப் பிரிவுகளாக உள்ளது. மேலும், நானூறுக்கும் மேற்பட்ட பேட்டிகளும், பல முக்கிய பேட்டிகள் எழுத்து வடிவிலும் இணையத் தளத்தில் கிடைக்கிறது.

தொடர்புடைய இணைய இணைப்புக்கள்:

Wednesday, November 26, 2008

எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!

எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!

உங்களில் பலர் அறிந்திருக்கும் 'நோம் சாம்ஸ்கி' பற்றி நானறிந்ததை எனது பதிவில் எழுதவேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.

நோம் சாம்ஸ்கி டிசம்பர் 7, 1928-இல் அமேரிக்கா பெனிசில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தில் பிறந்தவர். எழுபத்தொன்பதை முடித்து எண்பதைத் தொடும் இவரைப் பற்றி எழுத பக்கங்களல்ல, புத்தகங்கள் தேவைப்படும்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இவரை , 'நம்முடன் வாழ்பவர்களிலேயே மிக முக்கியமான அறிஞரென்று' அடையாளம் காட்டுகிறது.

தொழில்:
உலகின் முதல்தரக் கல்வி நிறுவனமான 'மாசெசூசெட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'-யில் 1955 முதல் மொழியியல் துறையில் 53 வருடங்களாகப் பேராசிரியராகப் பணியாற்றுபவர். (ஓய்வு பெற்றபின்னும் பணியில் தொடர்பவர்)

உண்மைத் தொழில் மனிதத்திற்கு எதிரான உலகின் எந்த நாட்டிலும் நடைபெறும் செயல்களை எதிர்த்துக் குரல் கொடுப்பது.

அறியப்படுவது:

மொழியியல் வல்லுநர், மொழியியல் தத்துவ வல்லுநர், 50கள் மற்றும் 60களில் மொழியியல் துறையில் இவரது கண்டுபிடிப்புகளும் பங்களிப்புகளும், மொழியியல் மற்றும் அது சார்ந்த துறைகளின் சிந்தனைப் போக்கை பெரிதாய் மாற்றியிருக்கிறது.

சாம்ஸ்கி சமகால அரசியலை தெளிவாய்/தைரியமாய் விமர்சிப்பவர், அமேரிக்க வல்லாண்மை, அமேரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தவறுகள் மற்றும் அரசாங்கமென்ற பெயரில் உலகில் நிகழும் அடக்குமுறைகளையும் எதிர்த்து 1960களின் நடுவிலிருந்து தனது கட்டுரைகள், பேட்டிகள் மற்றும் புத்தகங்களின் வழியாய் பெரிதாய் விமர்சித்து எழுதி வருபவர்.

அதிகாரத்தையும், அமேரிக்காவின் வல்லாண்மையையும், வியாபார சக்திகளின் ஆதிக்க மனப்பான்மையையும் எதிர்க்கும் இவரின் கொள்கை நிலைப்பாட்டினால் பொது (வணிக) ஊடகங்களில் அதிகம் பேசப்படாதவர் இவர். அதனால், அமேரிக்க பொது மக்களுக்கு இவர் பற்றிய அறிமுகம் மிகவும் குறைவே!

ஆனால் கலை மற்றும் மனிதம் குறித்த தகவல் தேடல்களில், அதிகம் தட்டுப்படும் பெயர்களில் இவர் பெயர் முக்கியமான ஒன்று.

கொள்கை:
அரசியல் பொருளாதார மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் இல்லாத சமுதாயம் வேண்டுமென எண்ணுபவர். இடதுசாரிகளுக்கு ஆதரவான கருத்துக்களுடைய இவர் இன்றைய அமேரிக்க அரசியலை மிகப் பெரிதும் விமர்சிப்பவர்களில் முக்கியமானவர். அரசியல் மற்றும் அரசு சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு எதிரானவராகவே தன்னை நிலைநிறுத்துபவர்.

அமேரிக்க தேர்தல் நேரத்தில் அக்டோபர் 10, 2008 அன்று 'தெர் ஸ்பீகல்' என்ற பத்திரிக்கைக்கு நோம் சாம்ஸ்கி அளித்த பேட்டியின்படி,

'தெர் ஸ்பீகல்' பத்திரிக்கை: உங்களைப் பொறுத்தவரை, (அமேரிக்க) குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் சிற்சில வேறுபாட்டுடன் கூடிய ஒரே அரசியல் தளத்திற்கானவை என்கிறீர்களா?
நோம் சாம்ஸ்கி: ஆம் வேறுபாடு இருந்தாலும் அவை அடிப்படை கொள்கைகளில் வேறானவையல்ல. எவரும் எந்த மாயைக்கும் ஆளாகத் தேவையில்லை. உண்மையில் அமேரிக்கா ஒரு கட்சி ஆட்சி முறைக்குள்தான் உள்ளது, அது 'வியாபாரங்களின்' கட்சியே.


'தெர் ஸ்பீகல்' பத்திரிக்கை: நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள், கிட்டத்தட்ட எல்லா முக்கிய கேள்விகளிலுமே - பணமுள்ளவர்களுக்கான வரிவிதிப்பு முதல் அணுசக்தி வரை - மாறுபட்ட நிலைகளே. போர் மற்றும் அமைதி குறித்த நிலைப்பாடுகளிலும் மிகவும் வேறுபடுகின்றன. மெக்கெயினைப் பொறுத்தவரை குடியரசுக் கட்சியினரோ நூறு ஆண்டுகளானாலும் இராக்கில் வெல்லும்வரை போரிட வேண்டுமென்று கூறுகின்றனர். ஆனால் ஜனநாயகக் கட்சியினரோ வெளியேற வேண்டுமென்று சொல்லுகின்றனர்.

நோம் சாம்ஸ்கி:அந்த வித்தியாசங்களை நாம் கவனித்து நோக்குவோம், அவை எவ்வளவு குறுகியதென்றும் தவறான நோக்கமுடையனவென்றும் தெரியவரும். குடியரசுக் கட்சியினரோ, நாம் (இராக்கில்) தொடர்ந்தால் வெல்ல இயலுமென்கிறார்கள். ஜனநாயகக் கட்சியினரோ, நமக்கு அதிக செலவாகிறதென்கிறார்கள். இந்தப் போர் ஒரு குற்றமென்று சொல்லக்கூடிய அமேரிக்க அரசியல்வாதி எவர் ஒருவரையாவது காட்டுங்களேன்? இங்கே பிரச்சினை வெல்லுவது குறித்தோ அல்லது ஆகும் செலவு குறித்தோ அல்ல. ஆப்கனிஸ்தானை ரஷ்யா கையகப்படுத்தியிருந்ததை நினைவிருக்கிறதா? ரஷ்யர்கள் வெல்லுவார்களா அல்லது அவர்களுக்கு செலவு அதிகமாகிறதாவென்றா நாம் பேசிக் கொண்டிருந்தோம்? இது க்ரெம்ளினுக்கான அல்லது ப்ராவ்தாவிற்கான விவாதமாயிருந்திருக்கக்கூடும். ஆனால் இது போன்ற விவாதத்தை ஒரு அடக்குமுறை சமுதாயத்தில் எதிர்பார்க்கலாம். புடின் செச்னியாவில் செய்ததை ஜெனரல் பெட்ராயஸ் ஈராக்கில் செய்தால் அவருக்கு முடிசூட்டலாம். இங்கே முக்கியமான கேள்வியே, நாம் நமக்கு பயன்படுத்தும் அளவுகோலை மற்றவர்களுக்கும் பயன்படுத்துகிறோமா என்பதே!



நோம் சாம்ஸ்கி குறித்து மேலும் அறிய:-

http://web.mit.edu/linguistics/people/faculty/chomsky/index.html

http://ta.wikipedia.org/wiki/நோம்_சோம்சுக்கி
http://en.wikipedia.org/wiki/Noam_Chomsky

அவரின் இணையத் தகவல் தளம் -> http://chomsky.info/index.htm

http://www.nybooks.com/articles/12172
http://chomsky.info/articles/20080919.htm
http://www.hinduonnet.com/fline/fl1824/nr.htm

நோம் சாம்ஸ்கி அவர்கள் எழுதிய சில புத்தகங்கள்












Monday, November 24, 2008

காதலென்பதில்லாத நாளொன்றில்....


காதலென்பதில்லாத நாளொன்றில்...




சிறு பிள்ளையாய் இருந்தக்கால்
பள்ளியருகே ஆலமரத்தின்
விழுதுகள் பிடித்து
விளையாடிச் சென்ற நாட்கள்
இன்றும் கண்களுக்குள் மறையாமல்.

ஏரித் தண்ணீரில்
எல்லோரும் நீந்துகையில்
கரையருகே குளித்தவாறே
தலையெண்ணியிருந்த நாட்களை
எண்ணுகையில் உள்ளமெல்லாம் ஈரமே.

நேற்றின் பசிய எண்ணங்கள்
ஏக்கமா, பாசமா? காதலும்தானே?
எண்ணிப் பார்க்கையில்
எல்லா நாட்களுமே
காதலில் நிழல் கண்டிருந்திருக்கின்றன.

அன்னையின் பாசம் காதலே
தந்தையின் அன்பு காதலே
உடன்பிறப்பின், உறவின் பரிவும் காதலே
கற்பித்தவனின் கண்டிப்பும் காதலே
கண்டு மனம் கொண்டவளின் மணமும் காதலே.

நட்பின் சேர்க்கையெல்லாம் காதலே
பிள்ளையின் ஏக்கமும் காதலே
நிராகரிக்கப்பட்ட கணங்களும்
தராமல் மறைக்கப்பட்ட காதலே
வெற்றியின் வருடலும்
தோல்வியின் தழுவலும்
காதலல்லாமல் வேறென்ன?

இந்தக் காதலென்பது
இல்லாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்?
யோசித்துப் பார்க்கிறேன்.
நிச்சயம் அந்த ஆலமரத்திற்கு
விழுதுகளில்லாமல் போயிருக்கும்.

இந்தக் காதலென்பது சிலருக்கு
சிறகு விரிக்காத நாளொன்றில்
மண்ணில் மனிதர் பலர்
மழலை மறந்திருப்பர்,
நிதானம் இல்லாது போயிருப்பர்,
பிள்ளைத்தனம் இழந்துபோய் கல்லாயிருப்பர்,
பணம் சுவாசத்தை வழிநடத்தும்,
துப்பாக்கிகளே புத்தகங்களாயிருக்கும்.

ஏன்
இன்று போல் இருந்திருக்குமோ?

அறிமுகம்

வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்!

என்னைப் பற்றி (அல்லது சுயதம்பட்டம் எனவும் சொல்லிக் கொள்ளலாம்)

பெயர் நம்பி, தொழில் மென்பொருள் துறையில்.


பிடித்தது, பிடிக்காததெனும் சார்பு நிலைகள்;-

தினம் மூழ்கிக் குளிப்பதனாலும் தாங்கிப் பிடிப்பதனாலும் முதலாளித்துவம் எனக்குப் பிடித்தல்ல; கண் முன்னே அதன் தவறுகளையும், தோல்விகளையும், தினம் வல்லாண்மையின் கைகள் அதனைப் பூசி மறைப்பது குறித்தும் நண்பர்களுடன் பேசிச் செல்வது மட்டுமுண்டு.

நுனிப்புல் மேய்வதால் இடதுசாரி என்று சொல்லிக் கொள்வதில்லை;
படிக்க வேண்டியதுவும் புரிந்து கொள்ள வேண்டியதுவும் அதிகமிருக்கிறது.

தினம் அணியாவிட்டாலும் கறுப்புச் சட்டை பிடிக்கும், ஆனால் தி.க. உறுப்பினரல்லன்.

தெள்ளிய தமிழில் தமிழரனைவரும் எழுதிப் படித்துப் பேசிடுதலென்பது ஆவல். தமிழ் பிடிக்கும், தமிழ் மட்டுமே பிடித்திருக்க வேண்டுமென்பதில் உடன்பாடில்லை.

மொழிக்குப் பதிலாய் வெறி பிடித்தவர்களின் அருகில் நிற்பதற்கில்லை,
மொழியை விற்றுப் பிழைக்கும் பெருந்தகைகளின் பெருத்த கைகளையும் காண்பதற்கில்லை.

மதமென்னும் பெயரில் பழக்க வழக்கங்களில் உட்கருத்தை மறந்து, மறுத்துச் சடங்குகளில் மட்டுமே தம் முகம் பார்க்கும் சனக்கூட்டம் முழுதாய் மாறும் நாள் பார்க்க ஆசை.

'சகுனம்' கற்றுக் கொள்வதற்கு முன்னர் 'அஹம் பிரம்மஸ்மி' அறிவராயின் தேசத்தில்
அன்பு கூடுமென்பதென் நம்பிக்கை.

மதம், தேசம், இனம், மொழி, வர்க்கமென்ற பெயரில் மனிதம் பிளந்து கிடப்பது பெருங்குற்றமென்பதுவும் இன்னொரு நம்பிக்கை.

நன்றி:-
மூன்றாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தமிழ்மணம் பழக்கமென்று அறிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி. பல மாற்றங்கள், சில பல சச்சரவுகளைக் கடந்து இன்றும் தமிழ் வலையுலகில் மிக முக்கிய பதிவுத் தொகுப்புத் தளமாகவும், புதுப் பதிவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாகவும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

குடும்பம், வேலை மற்றும் நட்பு வட்டாரமெனும் தளங்களுக்குள்ளே சுழன்று கொண்டு, செய்திகளையும், பதிவுகளையும், தமிழ் நாட்டு (அரசியல்) நிகழ்வுகளையும், தமிழ்மணத்தையும் படிப்பதிலேயேயும் பெரிதும் காலம் தள்ளும் என்னை,
எப்போதோ ஓரு முறை வலைப்பதிக்கும் நிலையிலிருந்தும் நட்சத்திரப் பதிவராக அழைத்தமைக்கு தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்!
அழைப்பின் தரத்தை காத்து, என்னால் இயன்றவரை தரமாக எழுத முயற்சிக்கிறேன்.

கண்டது, கேட்டது, படித்தது மற்றும் புரிந்தது குறித்து நான் மேலும் எழுத இந்த அழைப்பு பெரும் தூண்டுகோலாக இருக்கிறதென்பது உண்மை!
இதற்காய் என்னை மேலும் படிக்கத் தூண்டுவதற்கும் நன்றி.



Thursday, September 11, 2008

விதியும் வாழ்வின் விதையும்

இந்த பதிவுத்தளத்தின் தற்போதைய பதிவைக காண இங்கே செல்லவும் http://vaigaraivaanam.blogspot.com

பெரிதினும் பெரிது வேண்டி
சிறிதினை பெரிது முழுங்குதல்
விதியென்பதா? பரிணாமம் என்பதா?
இறை வகுத்த பாதையெனலாமா?
அதை வேட்டையென்றும் சொல்லலாமே?

எல்லாம் விதியென்றால்
மேலுள்ளவனின் விளையாட்டென்றால்
தனக்கும் சொந்தத்திற்கும் சொத்தெதற்கு?
மரம் வைத்தவனே
நீர் ஊற்ற மாட்டானோ?
அடிப்படையில் 'இறை'-யை
அறியாததால் வரும் பிழையா?

தன் வலியும் சொந்தங்களின் வலியும்
பெரிதெனக் கொண்டு
மனம் விதி மீற முயலுவதும்
மதி பிழறிச் செல்வதுவும் விதிதானோ?
இல்லை வெறும் சுயநலமோ?

விதி மீறும் குற்றமென
மனம் கொள்ளக் கூடாதென்று
'அது உன் கடமை',
செய் அதன் பலனை எதிர்பாராதே என்பது
வழிகாட்டும் வார்த்தையா
வலிகூட்டும் வித்தையா?
மனமிருகத்திற்கு இசைகூட்டும்
'கடமை' என்பதா? கயமை என்பதா?

பீலியானாலும் அச்சிறும்,
சிறிது பெரிதை ஒருநாள்
முழுதாய் எதிர்க்கும்;
எல்லைகளின் விளிம்புக்கு
உணர்வுகள் சென்றால்
உண்மை வெடிக்கும், பொய்கள் கிழியும்!

நிற்கும் களம் பொறுத்து
புரட்சியென்றும் கலகமென்றும் காணப்படும்.
விதி கொடுத்த வழியென்று காண்பாரோ?
பாரதி போல கலி முடிவென்று ஏற்பாரோ?

உயிர் மதித்து அடிமை மறுத்து
எல்லார்க்கும் அறிவு மலர்க்கும்
புதியதோர் உலகத்தின்
வாழ்வின் விதையெனவே அது காணப்படும்!

Friday, June 27, 2008

மதமில்லாத ஜீவன் - Jeevan, the Casteless - என் மன ஒட்டங்கள்

இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ளபடி, ஏழாம் வகுப்புப் கேரளப் பாடப் புத்தகங்களில் வைக்கப்பட்டுள்ள "மதமில்லாத ஜீவன்" என்ற ஒரு பாடத்தின் ஆங்கில வடிவத்தைப் படிக்க நேர்ந்தது, அதன் "எனது தமிழாக்கம்"
-------------------

தமது மகனை பள்ளியில் சேர்க்க வந்திருந்த ஒரு தாய் தந்தையரை தனது எதிரிலான இருக்கையில் அமரச் செய்துவிட்டு, தலைமையாசிரியர் சேர்க்கைக்கான படிவத்தை நிரப்பத் துவங்கினார்.

தம்பி உனது பெயரென்ன?
"ஜீவன்"
நல்லது நல்ல பெயராக இருக்கிறதே! உனது தந்தையின் பெயரென்ன?
"அன்வர் ரஷீத்"
தாயின் பெயரென்ன?
"லட்சுமி தேவி"
சற்றே தலையை உயர்த்திய தலைமையாசிரியர், பிள்ளையின் பெற்றோரை நோக்கி,
எந்த மதமென்று படிவத்தில் எழுதுவது?

"மதம் எதுவுமில்லை என்று எழுதுங்கள்"
ஜாதி?
"அதே பதிலை எழுதுங்கள்"
தலைமையாசிரியர் தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தவாறே, சற்று கவலையோடு,
"நாளை அவன் வளர்ந்த பின் அவனுக்கொரு மதம் தேவையாயிருந்தால் என்ன செய்வது?" என்றார்.
"அவனுக்கு என்ன மதம் தேவையாயிருக்கிறதோ அதை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்ற பதில் வந்தது பெற்றோரிடமிருந்து!

-------------------


இதனைப் படித்ததில் எனது மன ஓட்டங்கள்:-

படிக்கையில் கேள்விகளையும் சிந்திப்பதற்கான தேவையையும் ஏற்படுத்துவதாக இருக்கும் இந்தப் பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கான ஒரு நிச்சயத் தேவையென்பது எனது எண்ணம், நேரடி தீர்வுகளையோ கருத்துக்களையோ திணிக்காமல், சிந்தனைக்கும் மன நேர்மைக்கும் ஒரு கேள்வியாகத் தான் இந்தப் பாடத்தின் விளைவு இருக்குமென்பது எனது கருத்து!

கேரளாவில் இடதுசாரி அரசு நடத்திக் கொண்டிருக்கின்றது, அவர்களின் உந்துதலால் இந்தப் பாடம் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.
மதங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பதால் இதை எழுதியிருக்கிறார்களென்று, இதனை எதிர்த்து இந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவ அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கொடியுயர்த்தியுள்ளன. நிற்க.

காவி மோகத்திலும் தாக்கத்திலும் புத்தகங்களையும் வரலாற்றையும் மாற்றி எழுத நினைத்ததை ஒப்பிடுகையில், இங்கே உங்கள் முன் கேள்விகள் வைக்கப்படுகின்றன, பதிலுக்கு கொஞ்சம் யோசிக்க மட்டும்தான் வேண்டும்,
அதற்கு நாடு தயாராய்த்தான் இருக்கிறது என்பது எனது எண்ணம்!

இந்தப் பாடப் புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள கருத்து புதிதல்ல என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்.
1) பலகாலம் முன்னே ஓஷோ இதைப் பற்றிப் பேசியுள்ளார்,
"தேர்தலில் ஓட்டுப் போட்டு தலைமையைத் தெரிந்தெடுப்பதற்கு உங்களுக்கு ஒரு வயது வரம்பு தேவைப்படுகிறது, வாழ்க்கையில் உங்கள் நடைமுறையைத் தேர்ந்தெடுப்பதை மட்டும் ஏன் குழந்தையிலேயே அறியா வயதிலேயே இது தான் உனக்கு மதமென்று சொல்லிக் கொடுத்து பிஞ்சில் இன்ன மதம் நீயென்று பதிக்கிறீர்கள்? ஏன் அவர்களுக்கு எல்லா மதங்களையும் சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர்ந்த பின் அவர்களாகவே தான் இன்ன மதமென்று தேர்ந்தெடுத்துகொள்ளலாமே? சில ஆண்டுகாலம் உங்களை ஆளப்போவது யாரென்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு வயது வரம்பும் தெளிவும் தேவை, வாழ்க்கை முழுவதும் உங்களை வழிகாட்டப்போகும் சிந்தனைக்கு தேவையில்லையா?"

2) கலீல் கிப்ரான் குழந்தைகள் பற்றிய கவிதையில்,
"உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், கருத்துக்களை அல்ல, அவர்களின் கருத்துக்களின் மூலமாகவே வளரட்டும், அவர்களின் உடலை நலனை காத்துக்கொள்ளுங்கள் அவர்களின் சிந்தனைகளை அல்ல, அவை நாளையின் வீட்டில் வளரட்டும்!" ; கிப்ரான் மட்டுமல்ல இந்தக் கருத்து பல காலமாகவே புழங்கிவருவதுதான், இப்போதுதான் பாடப் புத்தகத்தில் வந்திருக்கிறது!

3) சில காலம் முன் நடிகர் கமல் தனது பிள்ளைகளை சென்னையில் பள்ளியில் சேர்க்க முயலும்போது, அவர்களுக்கு "மதம் ஏதும் இல்லை" எனப் பதிய முயன்றதில் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்,
அது போன்ற நிகழ்வினைத் தான் இந்த பாடம் காட்டுகிறது. நடப்பில் நிகழ்வில் உள்ள சிரமத்தின் ஒரு பகுதியைத்தான் இந்தப் பாடம் காட்டுகிறது.

4) மதம் மாறி, சாதி மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஏன் நீங்களாகவே இருக்கலாம், அந்த சூழ்நிலையில் இந்தப் பாடம் உங்களின் அன்றாடக் கேள்வியாகவே இருக்கும், இருந்திருக்கும். கேரளப் பள்ளிப் பாடம் இந்தக் கருத்தை முன்னெடுத்து சமுதாய விவாதமாக கொண்டு வந்திருக்கிறது.

இன்னும் பல இதுபோல் பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம், வரவேற்கத் தக்க ஒரு நிகழ்வாகத்தான் இந்தப் பாடத்தை நான் எண்ணுகிறேன்,
நிச்சயம் இந்தியாவின் அனைத்துக் கல்வி முறைகளிலும் இந்தப் பாடம் வரவேண்டுமென்பது எனது விருப்பம்!

புத்தரின் பின்வரும் கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது,
அறிஞரென்று கருதப்படுபவர்களால் சொல்லப்படுவதாலேயே
எதையும் நம்பிவிடாதே, எல்லோரும் நம்புகிறார்கள் என்பதற்காகவே எதையும் நம்பிவிடாதே, பழைய புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென்பதால் எதையும் நம்பாதே, கடவுள் சொன்னதென்று சொல்லப்படுவதாலேயே எதையும் நம்பிவிடாதே, வேறொருவர் நம்புவதால் எதையும் நம்பிவிடாதே, உன்னால் ஆராயமுடிந்து தீர்மானிக்கக்கூடியதை மட்டுமே நம்பு!

"
Buddha: Believe nothing just because a so-called wise person said it. Believe nothing just because a belief is generally held. Believe nothing just because it is said in ancient books. Believe nothing just because it is said to be of divine origin. Believe nothing just because someone else believes it. Believe only what you yourself test and judge to be true.
"
ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை, வழிமுறையைத் தான் இந்தப் பள்ளிப் பாடம் தருகிறது!

-------------------------------

தொடர்பான இணையத் தொடுப்புகள்:-
http://www.hindu.com/2008/06/26/stories/2008062655381100.htm

http://krgopalan.blogspot.com/2008/06/jeevan-casteless.html

http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEO20080625010238&Page=O&Title=Thiruvananthapuram&Topic=0

http://www.katsandogz.com/onchildren.html

Saturday, April 19, 2008

கனவுகள் மட்டுமே சுகமாய்!

பதின்மத்தின் இருப்பிலும்,
அதன் நிழலிலும் மனம் நின்றிருந்தபோதெல்லாம்
கரையில் காலைத் தொட்டுச் சென்ற
கடல் நீரலைகள் நெஞ்சை நனைக்கும்;
தோட்டத்தில் மரத்தை தழுவிச் சென்ற
மாலைக் காற்று மனதை நிறைக்கும்;
காத்திருப்பின் கணப்பொழுதில்
கடிகாரத்தின் நொடிமுள் நகராமல் நிற்கும்;
சூரியனின் தொடலுக்காய் காத்திருக்கும்
அடிவானம் மனதில் அழகிய கோலமிடும்;

காலத்தின் ஓட்டம் வயதைக் கூட்டும்,
சிந்தனையின் ஓட்டம் பாரத்தைக் கூட்டும்;
இப்போதெல்லாம்
காலைத் தொட்டுச் சென்ற அன்றின்
கடல் நீரலைகள் எங்கே போனதுவோ?

நொடிமுள் காணவில்லை
கடிகாரம் தேவைப்படுவதில்லை ஆனாலும்
வருடங்கள் வேகமாய் ஓடுகின்றன;
உதிப்பதுவும் மறைவதுவும்
சுவாசத்தைப்போல் சிந்தையில் நிற்பதில்லை!

கேள்விகளின் துவக்கம்
பதிலில் முடியாமல்
சிந்தனையில் பந்தடித்து
உறக்கத்தின் துவக்கத்தை தடுத்து நிறுத்தும்;

அறிதலிலும் கற்றலிலும்
அமைதி மட்டும் ஒளியாண்டுத் தொலைவில்!
ஆனாலும் அறிவு சுட்டுக்கொண்டேயிருக்கிறது!

பதின்மம் தாண்டிப் போனது உண்மை,
உண்மையும் அறிவும் தாண்டிப் போமா?
இங்கே கனவுகள் மட்டுமே சுகமாய் இலவசமாய்,
சிந்திக்காத நேரத்தில் வாழ்க்கையும் சுகமாய்;

----------------------
பதின்மம் - பதிமூன்று முதல் பத்தொன்பது வரையிலான விடலைப் பருவம் (Teen Age)

ஒளியாண்டுத் தொலைவு - ஒளியானது வெற்றிடத்தில் ஒரு நொடிப்பொழுதில் 299,792,458 மீட்டர் பயணம் செல்லும், ஒரு ஆண்டுக்காலத்தில் 9,460,730,472,580.800 கி.மீ. பயணம் செல்லும் (தொண்ணூற்றி நாலாயிரம் கோடியே சொச்சம் மைல்கள்), ஒப்பீட்டு அளவில் மிக மிக அதிக தூரம்.
----------------------

Thursday, April 17, 2008

சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்!



முழுப்பெயர்: சார்லஸ் ராபர்ட் டார்வின்
பிறப்பு: 12 பிப்ரவரி 1809
இறப்பு: 19 ஏப்ரல் 1882

டார்வின் ஆன்லைன் திட்டம் குறித்து
------------------------------------------------
2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "டார்வின் ஆன்லைன்" திட்டத்தின் விளைவாக, டார்வின் அவர்கள் தனது வாழ்நாளில் அவரது ஆய்வுகளுக்காக எழுதிய 90,000 பக்க ஆய்வுக் கட்டுரைகள், குறிப்புக்கள், வரைபடங்கள் மற்றும் நிழற்படங்கள் தற்போது, அனைவரும் படித்துச் செல்லும் விதமாய் http://darwin-online.org.uk என்னும் இணையத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நூலகத்திலிருந்த டார்வினின் ஆய்வு எழுத்துக்களும் மற்றும் உலகமறிந்த "பரிணாமத் தத்துவம்" தொடர்பான அவரின் எழுத்துக்கள் அனைத்தும் உலகின் பார்வைக்காய் அந்த தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 40,000 பார்வையாளர்களை ஈர்ப்பதாகவும், இதுவரை இரண்டரைக் கோடி பார்வையாளர்கள் தளத்திற்கு வந்துள்ளதாகவும், டார்வின் ஆன்லைன் தளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

டார்வின் குறித்து: -
----------------------
மருத்துவத் துறையில் பயில எண்ணியிருந்த டார்வின், எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் "கிறித்துவ இறையியல்" படித்தார். இயற்கை ஆர்வலரான டார்வின், 1831ஆம் ஆண்டில் எச் எம் எஸ் பீகில் (HMS Beagle) என்னும் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றும் ஐந்தாண்டு கால ஆராய்ச்சிப் பயணம் துவங்குவது அறிந்து அந்தக் குழுவில் சேர்ந்தார்; பின்னாளில் டார்வினின் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கெல்லாம் அந்தப் பயணம் தந்த அறிவும், அதன் மூலம் தேடிக் கற்ற தெளிவும்தான் காரணம்.

ஏழு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்தார் என்ற பைபிளின் வழியான ஐரோப்பியர்களின் நம்பிக்கையை, ஆராய்ச்சிப் பயணக் காலத்தில் படித்த முந்தைய கட்டுரைகளின் தெளிவாலும் தனக்குள்ளே கேள்விகளுக்கு உள்ளாக்கியிருந்தார் டார்வின். "லையல்" அவர்களின் "புவியியல் கொள்கைகள்" ( Lyell's Principles of Geology) என்னும் புத்தகத்தில் தெரிவித்திருந்த "பாறைகளில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள்(fossils), அந்த உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கான சான்று" என்ற கருத்தும், டார்வினின் கடற் பயணத்தில் அவர் கண்ட பற்பல தீவுகளில் பார்த்த பல்வேறு வித உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்முறைகளும் அவரின் கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தன. தென் அமெரிக்காவினை அவரின் பயணம் நெருங்கியபோது, காலபாகஸ் (Galapagos) தீவில் கண்டெடுத்த சில ஆராய்ச்சிப் படிமங்களும் அவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையளித்தன. இங்கிலாந்து திரும்பியபின், 1836ஆம் ஆண்டு, அவரின் ஆய்வு முடிவுகளை "பரிணாமத் தத்துவம் மற்றும் இயற்கை தெரிவு" என்ற வகையில் டார்வின் வெளியிட்டார்.

"பரிணாமத் தத்துவத்தின்" மீதாக மேலும் 20 ஆண்டுகள் உழைத்து பல தகவல்களை சேகரித்து, அவரைப் போல பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து ஒத்த கருத்தை கொண்டிருந்த "ஆல்பிரட் ரஸ்ஸ்ல் வாலஸ்" எனும் இன்னொரு இயற்கை ஆய்வாளருடன் கூட்டாக 1958ஆம் ஆண்டு "இயற்கைத் தெரிவின் விளைவான உயிர்களின் தோற்றம்" என்ற புத்தகத்தை டார்வின் வெளியிட்டார்.

டார்வினின் கொள்கைப்படி, மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்விலங்குகளிலிருந்து (குரங்கு) பரிணாம வளர்ச்சியின் மூலமாக தோன்றியவர்கள் என்பது, அதுநாள் வரை பைபிளின் வழியாய், கடவுள் மனிதனைப் படைத்த கருத்திற்கு முற்றிலும் எதிர்ப்பாகவும், பைபிளைக் கேள்வி கேட்பதாகவும் இருந்ததால், டார்வின் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, மனிதன் கடவுளால் நேரடியாகப் படைக்கப்படவில்லையெனும் டார்வினின் கருத்தை கிறித்துவ உலகம் ஏற்றுக்கொள்ளாமல் தான் உள்ளது. இருந்தாலும், அவரின் கொள்கை குறித்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் அறிவியல் உலகில் பெரிதாய் ஏற்கப்பட்டது. இன்றைய மருத்துவ உலகின் பல கண்டுபிடிப்புக்கள் டார்வினின் கொள்கை மற்றும் அது குறித்த பிற்கால அறிவியல் அறிஞர்களின் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.


தொடர்புள்ள தொடுப்புக்கள்:
http://darwin-online.org.uk/
ta.wikipedia.org/wiki/சார்லஸ்_டார்வின்
http://en.wikipedia.org/wiki/Charles_Darwin
http://www.nilacharal.com/tamil/ariviyal/tamil_science_320.asp
http://www.guardian.co.uk/science/2008/apr/17/darwinbicentenary.evolution

Sunday, March 23, 2008

இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்



பகத் சிங்
பிறப்பு:- செப்டம்பர் 27, 1907(லயல்புர், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)
இறப்பு:- மார்ச் 23, 1931 ( லாகூர் சிறையில் தூக்கில், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)

தூக்கிலடப்பட்டதன் காரணம்:- இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தது மற்றும், தில்லி நாடாளுமன்ற அவையில் ஒரு சிறு குண்டெறிந்துப் பின் காவலர்கள் கைது செய்யும்வரையில் பார்வையாளர் அரங்கிலேயே நின்றிருந்து, அவையில் நிறைவேற்றவிருந்த "இந்திய பாதுகாப்புச்" சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க முயன்றது.

இருபத்து நான்காம் வயதிலேயே தனது உயிரை நாட்டுக்காகவும் கொள்கைக்காகவும்
கொடுத்த பகத் சிங், இந்துஸ்தான் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் (HSRA Hindustan Socialist Republic Association) எனும், இரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் இந்தியாவில் ஏற்பட்டிருந்த புரட்சிக் குழுவின் தீவிர உறுப்பினர். வர்க்க பேதங்களையும், இறை நம்பிக்கை, சாதி மற்றும் அதன் தொடர்பான மூட நம்பிக்கைகளையும் அவர் முழுமையாய் எதிர்த்தார்.

21 வயதில் எடுக்கப்பட்ட பகத் சிங்கின் படம்:-


மார்ச் 23, 1931 அன்று காலை 7 மணியளவில்(சரியாக 77 ஆண்டுகளுக்கு முன்பு), பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூர் சிறையில், தோழர்கள் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய இருவருடனும் தூக்கிலிப்பட்ட பகத் சிங்,பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய சுதந்திரப் போரிலும் இந்திய வரலாற்றிலும் ஒரு முக்கியப் பக்கம், போராட்டம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

தனது கடைசி கடிதத்தில் பகத் சிங் எழுதியது, "போரிட்டுக் கொண்டிருக்கும்போது என்னைக் கைது செய்துள்ளனர், எனக்கு தூக்கு தேவையில்லை, பீரங்கியின் வாயில் வைத்து என்னைச் சிதறச் செய்யுங்கள்!", மரணத்திற்கு அஞ்சாமல் எழுதப்பட்ட வரிகள்!

கொள்கைப் பிடிப்பினை மாற்றிக் கொள்ளாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல் விடுதலையை வாழச் சொல்லிவிட்டு (இன்குலாப் ஜிந்தாபாத்) தன்னுயிரை தேச விடுதலைக்காக தந்த பகத் சிங்கின் வாழ்க்கை தலைமுறைகள் தாண்டியும் துணிவிற்கு உதாரணமாய் நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு;

பகத் சிங் சிறையிலிருந்தபோது எடுத்த படம்:-







பகத் சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்" - என்ற கடிதம் அவருடைய இறை மறுப்புக் கொள்கையை விளக்கிச் சொல்லும். மேலும், பகத் சிங்கின் நாட்குறிப்புப் புத்தகத்தில், மார்க்சியக் கொள்கை நம்பிக்கைகளும், இறை மறுப்பைப் பற்றிய குறிப்புக்களும் பெரிதும் இடம் பெற்றிருந்தன.

தூக்கிலிட்ட நேரத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டவாறே இறந்தவன் பகத் சிங்!

பகத் சிங்கின் தூக்கு குறித்த காந்தியின் வரிகளில்,
"பகத் சிங் வாழ விருப்பப்படவில்லை, (பிரிட்டிஷாரிடம்) மன்னிப்பு கோர மறுத்தும், வேண்டுகோள் விடக் கூடவும் தயாராக இல்லை. பகத் சிங் அறநெறியை பின்பற்றவில்லை, அதே நேரத்தில் வன்முறையை தழுவவும் தயாராகவில்லை!"

பகத் சிங்கின் மரணத்தை தடுக்கும் முயற்சியில் காந்தி தீவிரமாக ஈடுபடவில்லை என்ற கருத்து இன்றுவரை பெரிதாய் இருக்கிறது!

மார்ச் 29, 1931 குடியரசு வார இதழில், பெரியார் எழுதியது,

"பகத் சிங்கை தூக்கிலிட்ட நிகழ்வுக்கு வருந்தாதவர் எவருமில்லை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயலை கண்டிக்காதவரும் எவருமில்லை"

"பகத் சிங்கின் சிந்தனையும் கொள்கைகளும் எந்த சட்டத்தின் நோக்கிலும் குற்றம் இல்லை, அப்படியே சட்டத்திற்கு எதிரானதெனக் கூறினாலும், அந்தக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை, ஏனெனில் யாருக்கும் எந்த தீங்கையும், பொதுமக்களுக்கு எந்த விதமான இழப்பையும் ஏற்படுத்தாத பகத் சிங்கின் கொள்கையை செயலுக்கு கொணர நாம் உழைப்போம்!"



-----------------------------------------
பகத் சிங் குறித்து மேலும் விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh
பெரியார் கண்ணோட்டம்,இந்து நாளேட்டில் வந்திருந்த தலையங்கம்
http://www.hindu.com/2008/03/22/stories/2008032251531100.htm
பகத் சிங் மரணம் குறித்த காந்தியின் கடிதம்
http://www.kamat.com/mmgandhi/onbhagatsingh.htm
நான் ஏன் நாத்திகனானேன் - பகத் சிங்கின் கடிதம்
http://www.boloji.com/spirituality/051.htm
மேலும், http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm