நவம்பர் 24 முதல் 30 வரையிலான வாரம் தமிழ்மணம் நட்சத்திரப் பதிப்பிற்கான வாரமென்பது கொஞ்சம் தவிப்பையும் கூட்டியது. இது தவிர்த்து, நட்சத்திர வாரம் துவங்கும் திங்களன்று, 'சுடர்விழி' என்ற பதிவரின் பதிவு தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டதும் கேள்விகளைக் கூட்டியது. தமிழ்மண நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அதை மாற்றிய பிறகு அறிமுகப் பதிவையும் பிற பதிவுகளையும் பதிக்க ஆரம்பித்தேன். மாறிமாறி வந்த மின்வெட்டுக்களும், விட்டுவிட்டு வேலை செய்த தொலைபேசி இணைப்புக்கும் நடுவில் திங்களன்றும் செவ்வாயன்றும் பதிக்க முயன்றது இன்னமும் மறக்கவில்லை.
செவ்வாயன்று, மிகக் குறைந்த அளவு நேரமே வேலை செய்த இணைய இணைப்பு, புதனன்று காலையில் முழுதும் படுத்துவிட்டது. கரையைக் கடக்க நிஷா முயன்று கொண்டிருந்ததால் எங்கும் பெரு மழை. அந்த மழையிலும், எனது மாமாவை, அருகிலுள்ள தொலைதொடர்புத் துறை அலுவலகத்திற்கு அனுப்பி, பொறியாளரைத் தேடிப் பிடித்து வீட்டுக்கு வரவழைத்து, கம்பத்திலிருந்து வீட்டிற்கு வரும் இணைப்பைச் சரிசெய்யச் சொன்னது ஒரு பெரிய கதை.
எழுத எண்ணி எழுதாமல் விட்ட சில தலைப்புகள், நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்,
1) கிட்மோ (குவண்டனமோ) என்னும் கொடுஞ்சிறை
2) வீடற்றவர்களின் தலைநகரம் அல்லது லாஸ் ஏஞ்சலஸ் எனவும் சொல்லலாம்
3) FDA-வின் உணவுப் பிரமிடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
4) நீங்கள் உடற்பயிற்சியிடமிருந்து தப்பிக்க முடியாது
இந்த மின்வெட்டு மற்றும் தொலைபேசி இணைப்புப் பழுதுகள் எனக்கு இன்னொரு விதமாக உதவத் துவங்கியது. பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு, பேனாவைக் கையிலெடுத்து எழுதும் பழக்கத்தை மறுபடியும் தூண்டியது, கட்டாயமாக்கியது. கணிணியிலேயே எழுத்துப் பலகையைத் தட்டிக் கொண்டும் யோசித்துக் கொண்டுமிருந்ததை விட, வெறும் தாளில் எழுதுவதிலுள்ள வசதியை இந்த நிகழ்வுகள் எனக்குச் சுவைக்கத் தந்தன. நிற்க.
எப்போதாவது ஒரு முறை வலையில் பதிக்கும் என்னை, மேலும் மேலும் படிக்க,
எழுதத் தூண்டியது இந்த நட்சத்திர வாரம்.
மேலும், என் எண்ணத்தில் உள்ளதை நான் எழுத்தில் பதிப்பித்ததை பதிவுகளுக்கு வந்து படித்த அனைவருக்கும், நட்சத்திர பதிவராய் வாய்ப்பளித்த தமிழ் மண நட்சத்திர பதிவுகள் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்.
வணக்கம்.
3 comments:
நம்பி தங்களது நட்சத்திர வாரப்பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தது! வாழத்துக்கள்!
நன்றி நண்பரே, உங்கள் வாழ்த்துக்களுக்கு!
இந்த மின்வெட்டு மற்றும் தொலைபேசி இணைப்புப் பழுதுகள் எனக்கு இன்னொரு விதமாக உதவத் துவங்கியது. பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு, பேனாவைக் கையிலெடுத்து எழுதும் பழக்கத்தை மறுபடியும் தூண்டியது, கட்டாயமாக்கியது. கணிணியிலேயே எழுத்துப் பலகையைத் தட்டிக் கொண்டும் யோசித்துக் கொண்டுமிருந்ததை விட, வெறும் தாளில் எழுதுவதிலுள்ள வசதியை இந்த நிகழ்வுகள் எனக்குச் சுவைக்கத் தந்தன. நிற்க. நல்லா எழுதியுள்ளீர்.நிறய எழிதுங்க நம்பி.
Post a Comment