Friday, November 17, 2006

கனவும் காட்சியும்!!!

வள்ளுவன் வாக்கு!
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்;
ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர்;

கனவும் காட்சியும்!!!

உணவு மட்டுமே இவர்களுக்கு உணவாய் இருக்கின்றது,
கனவுதான் உணவு என்பதே இவர்களுக்கு தெரியவில்லை!
(ஜேஜே சில குறிப்புகளிலிருந்து)
அதென்னவோ இன்றைக்கும் நிஜமாய்த்தான் இருக்கிறது.

கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!
கனவுகள் தான் நிஜத்தின் பாதை,
கனவுகள் தானே நாளை என்பதையே
நம் கண்களுக்கு காட்டுகின்றன.

"கண்ட கனவு பலித்தால்" என்பதுதானே பல நேரங்களில்
நாளையே நமக்கு துவக்கி வைக்கின்றது! மாற்றியும் வைக்கின்றது.

விடியலில் உறக்கத்தை வழியனுப்பும் கனவு
நம் மனதை நிறைக்கா நாளேது?

உறக்கத்தின் கனவுகளில் சில உலகத்திற்கே வழி காட்டியிருக்கின்றன. உறக்கத்திற்கு மட்டுமல்ல, விழிப்புக்கும் கூடத்தான் கனவு சொந்தம்.

விழிப்பின் கனவு சிறப்பான கனவு,
சிந்தையின் உச்சத்தின் வந்த கனவு அது!
செயலின் உச்சத்தில் வரும் கனவும் அதுவே!

விழிப்பின் கனவு வேறெதுவுமில்லை,
முனைப்பின் கனவு அது,
தியானத்தின் கனவு அது,
போதியினடியில் புத்தன் கண்ட கனவு அது.

நாளையின் பாதையை நமக்கு மட்டுமல்ல
உலகுக்கே மாற்றியமைக்கும் சக்தி கொண்டது அது .

கனவை காட்சியாக்கும் முயற்சியில்தான் உலகே இயங்கிக்
கொண்டிருக்கின்றது, மறுக்க முடியாத உண்மை இதுதானே!!

நமது கனவென்ன?
எல்லோருக்கும் நல்லன எல்லாம் கிட்ட வேண்டும் என்பதுதானே!

நம் கனவும் காட்சியாகட்டும்,
நம் கனவையும் அயரா உழைப்பையும் அதற்கே விலையாய்
இன்றே தருவோம்!!

நம்புங்கள் நாட்கள் எல்லாம் பொய்,
இன்றின் கனவுகளும் நாளையின் காட்சியும் மட்டுமே உண்மை!

கனவு காணுவோம்! கனவு காணுவோம்!!

அன்புடன்,
நம்பி.பா.

பி.கு. இந்த பதிவு http://nallathunadakattum.blogspot.com/ பதிவில்
மறுபதியப்பட்டுள்ளது.

Wednesday, November 15, 2006

கருத்து கந்தசாமியும் மாறுபாடு மன்னார்சாமியும்!

கருத்து கந்தசாமியும் மாறுபாடு மன்னார்சாமியும்!

கந்தசாமியும் மன்னார்சாமியும் ரொம்ப காலத்துக்கு முன்னால பொறந்தவங்க,
அவங்க எப்ப, எங்க பொறந்தாங்கன்னு இதுவரைக்கும் யாராலயும்
கண்டுபுடிக்க முடியல. ரெண்டு பேரும் ஒரு தாய் வயித்து பிள்ளையா தான்
இருந்திருக்கணும்னு நான் நினைக்கிறேன், அவங்க ரெண்டு பேரும்
ஒண்ணாவே தான் பொறந்திருக்கணும்.

எப்பப் பாத்தாலும் எங்க போனாலும், அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாவேதான் போவாங்க, ஒருத்தர் என்ன சொன்னாலும் அடுத்தவர்
அதுக்கு எதிர்ப்பாவேதான் சொல்லுவாங்க. பிரச்சினை என்னன்னா அதுல
யாரு எப்ப சரின்னு யாராலயும் சொல்ல முடியாது! இடத்துக்கேத்த மாதிரியும்
நேரத்துக்கேத்த மாதிரியும் நிலையை மாத்திப்பாங்க.

அய்யா, முட்டையிலருந்து தான் கோழி வருதுன்னு கந்தசாமி
சொன்னாருன்னா, இல்லய்யா கோழிலருந்துதான் முட்டை வருதுன்னு
மன்னார்சாமி சொல்லுவார். இந்த கேள்விக்கு எல்லாராலயும் சுலபமா பதில்
சொல்ல முடியாது, இவங்க கிட்ட மாட்டிட்டு கிட்டத்தட்ட எல்லாருமே
முழிக்கறாங்க. மாட்டிட்டு முழிக்காதவங்க எல்லாம் வாழ்க்கையில
விழிக்காதவங்களாதான் இருக்காங்கன்னு கந்தசாமி சொல்றாரு, ஏன்னா
யோசிக்கவே மாட்டாங்கன்னும் அவர் சொல்றாரு. ஆனா அவங்கல்லாம்
பொழைக்கத் தெரிஞ்சவங்கன்னு மன்னார்சாமி சொல்றாரு, கேள்வி
கேட்டுட்டு நேரத்தை வீணடிக்க மாட்டாங்கன்றாரு. ஒரே கொழப்பம்தான்
கூடுது!

ரொம்ப படிச்சு ஒலகத்தை நல்லாவே புரிஞ்சுகிட்டவங்களப் பார்த்தா, சில நேரம்
கந்தசாமி வேஷம் போடறாங்க, சில நேரம் மன்னார்சாமி வேஷம் போடறாங்க,
என்னைப் போல ஆளுங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

புத்தனை பார்த்தா, அவரு முதல்ல மன்னார்சாமி வேஷம் போட்டுட்டு, பின்னாலே
கந்தசாமியா மாறிட்டுருக்காரு. சாக்ரடீசா இருந்தாலும், அரிஸ்டாட்டிலா இருந்ததாலும்
சரி, அட, இதே கதைதான் மத்த பெரிய மனுஷங்களோட வாழ்க்கையிலயும் நடந்திருக்கு!

எனக்கென்னவே இதெல்லாம் ஒத்து வரவே மாட்டேங்குது, கந்தசாமி வேஷம்
போடறதுக்கு ரொம்ப தைரியம் வேணும் போலருக்கு! மன்னார்சாமி வேஷம்தான்
ரொம்ப ஈஸியா இருக்கா மாதிரியிருக்கு, ஆனா மன்னார்சாமி வேஷம் போட்டா
சுத்தி இருக்கறவங்க எல்லாம் ஒதைக்கத்தான் வர்றாங்க.

மன்னார்சாமி மடம்னு ஏதாவது இருந்தா தேடித்தான் போகணும் போலருக்கு!

இப்போதைக்கு இத்தோட நிறுத்திக்கறேன்!

அன்புடன்,
நம்பி. பா.