வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் - நிகழ்வுகளும் நேற்றுகளும் மாறி மாறிச் சிந்தனையில் வந்து செல்கின்றன; சிந்தனையாகவும் மாறிச் செல்கின்றன. நாளையை நேர் செய்ய நேற்றுகளையும் நிகழ்வுகளையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுகள் அது போன்று என்னுள் வரும் சில கேள்விகளின் பதிவுகளே!
Tuesday, April 28, 2009
காதலின் நீண்ட விழியசைப்பில்
காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.
எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.
காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.
புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.
பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.
அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.
கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.
மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.
எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!
Subscribe to:
Posts (Atom)