Friday, January 12, 2007

சாதி, இந்து மதம் மற்றும் நாளை!

இந்த பதிவு, மாற்றம் நம் மனதிலிருந்து துவங்க வேண்டுமென்ற
கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

சாதிப் பிரச்சினை, இந்து மதத்திற்கே உரிய பெரும் பிரச்சினை,
கால மாற்றத்தில், தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியில் இன்று
முன்னிலும் பெரிதாய் பேசப்படுவது; சில பத்தாண்டுகளுக்கு
முன்பிருந்த வாழ்நிலையை விட இன்றின் இந்தியாவில்
இது குறித்து பெரு முன்னேற்றமும் விழிப்பும் ஏற்பட்டுள்ளது!
மனு தர்மம் மற்றும் வர்ணாசிரமம் இவையிரண்டும்தான் இந்த
சாதிப் பிரச்சினைக்கு பெருங்காரணிகளாய் இருக்கின்றன.

பெரியார் போன்றவர்களின் பெருமுயற்சியால், தமிழகத்தின்
இன்றைய நிலை மற்ற பல வட மாநிலங்களைவிட பெரிதும்
சாதிப் பிரச்சினையில் முன்னேறியிருந்தாலும், இந்திய தேசத்தின்
ஒவ்வொரு துளி நிலத்திலிருந்தும் சாதியைப் போக்காமல்,
மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதுவும் நடத்தப்படுவதுவும் இயலாத
ஒன்று!

பிஞ்சுகளின் மனதிலும் நஞ்சை விதைக்கும் இந்த சாதி வேற்றுமையை
சமுதாயத்திலிருந்து முற்றிலும் களைய வேண்டும். ஆக்கமான
முயற்சிகளை அனைவரும் எடுப்பதே இதை அடுத்த
பத்தாண்டுகளிலாவது மக்கள் மனதிலிருந்து போக்குவதற்கான ஒரே வழி.

இன்றைக்கு இருக்கும் தலைமுறையையோ, உடன் பேசிப்
பழகுபவர்களையோ இதற்கு குறைகாட்டி எழுதுவதில் இந்தப்
பிரச்சினை தீராது. உடலின் எல்லா நோய்களுக்கும் ஒரே நாளில் ஒரே
நேரத்தில் மருந்தளிக்க முடியாது, ஒவ்வொன்றாய்த் தான் கவனிக்க
வேண்டும்.

வேதம் படித்தவர்கள், சாதி வேற்றுமை வேதத்தில் இல்லவே இல்லை,
காலத்தின் போக்கில் சிலரின் வாழ்வு முறைத் தேவைக்காக
ஏற்படுத்தப்பட்டதே இந்த நாற்சாதி (வர்ணாசிரம சதுர்வர்ணம்)
முறை என்று சொல்கின்றனர், உங்களுக்கு அறிந்த உண்மையை
ஊருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!

கண்முன்னே, நம்போல் இன்னொருவரை தாழ்த்தவோ உயர்த்தவோ
செய்தல் பெருங்குற்றமென்பதை ஏற்கனவே அரசியல் சட்டம்
பேசிவிட்டாலும், ஒவ்வொரு இந்து மதத் தலைவரும் வெளிப்படையாய்
இது குறித்து மக்களிடம் நேரிடையாய் பேசாமல் இந்த குறையை
போக்க முடியாது.

ஒவ்வொரு அலுவலகம், பள்ளி மற்றும் பொது இடத்திலும்
"தீண்டாமை பெருங்குற்றம்" என அறிவிப்பு பலகை இருப்பது போதாது.
ஒவ்வொரு கோயிலிலும். ஒவ்வொரு கோயில் கதவிலும் அதை
எழுதி வைப்பதுவும், கோயில் பணியாளர்கள் ஒவ்வொருவரும்
இது குறித்த உறுதிமொழியை மாதம் ஒரு முறை எடுக்கச் செய்தல்
வேண்டும்.

வேதம் பெரிதென்று எண்ணினால், வேதத்தில் சாதி பேதம்
இல்லையென்றும், பிறப்பால் அனைவரும் சமம் எடுத்துச் சொல்ல
இந்து மதத் தலைவர்கள், மத விற்பன்னர்கள் அனைவரும்
முன்வருவார்களா?


இதற்கு தயாராகாவிட்டால், இன்றில் வழக்கிலிருக்கும் இந்து மதம்
நாளை இருக்குமா? நிச்சயம் இருக்காது!!

காலத்தின் தேவைக்கும், சக மனிதர்களின் மனிதத்திற்கும், உணர்வுக்கும்
உரிமைக்கும் இடங்கொடாத எதற்கும், காலம் இடங்கொடாதென்பது
யாவருமறிந்த உண்மை!


பிகு. செல்வன் அவர்கள் எழுதிய வலைப்பதிவின் தாக்கத்தால்
எழுதியது,
அவரின் பதிவு: http://holyox.blogspot.com/2007/01/227.html