Friday, November 9, 2007

பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?

பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?
எனக்கென்ன வந்தது,
அதற்கும் என் வீட்டிற்குமிடையே
நாலடி தூரம் இருக்கிறதே!

இன்றொரு பேச்சு நாளையொரு பேச்சு
நேற்று பேசியது மறந்தே போச்சு!
வழிபடுதல்தானே எமக்கு தெரியும்
உள்ளிருப்பது எதுவானால் என்ன?
வாழக் கற்றுக் கொள்ளாமல்
வழிபாடுகளுக்கு பொருளுமென்ன?

உள்ளிருப்பது எதுவென்று தெரிந்தால்
வந்த மதங்களின் நோக்கம் புரிந்தால்
எதை வழிபடுவாய் நீ?
உன்னையும் உடனிருப்பவரையும்
மறுக்கும் உனக்கேது வழி?

வெட்கமென்பது என்ன
யோசிப்பவர்களுக்கும் விடலைகளுக்கும் தானே
விதி விட்ட போக்கில் வாழும்
வேடிக்கை மனிதர்கள் நமக்கென்ன?

சிந்தை மடிந்து வாழும்
சந்தைக் கூட்டம்தானோ?
கேள்விகளே இறந்துவிட்டன
சுவாசம் மட்டும் எதற்கு?

பக்கத்து வீட்டின் தீ
உன் வாசலைத் தொடும்போது
பார்த்துப் பார்த்துக்
கைகொட்டிப் பழகிய நீ
என்ன செய்யப் போகிறாய்?

பின்குறிப்பு:-
எரிவது ஈழமானாலும், பாகிஸ்தான் ஆனாலும்
பக்கத்து ஊரின் சாதிக் கலவரமானாலும் என்ன,
கேள்விகள் கேட்க நாம் துணியாதவரை
பதில்கள் எங்கே எப்படிக் கிட்டும்?