Friday, January 5, 2007

மனமும் மழைக்கால மழலைகளும்!

மனமும் மழைக்கால மழலைகளும்!

தூவானப் பூக்கள்
ஈரம் தரும் நேரம்
அந்தியின் ஆர்ப்பாட்டத்துக்குள்
அடைக்கலமாகும் சூரியன்;

பொய்யறியாத இரு சிறு பிஞ்சுகள்
பூமழையில் நனைதல் கண்டேன்

விளையாட்டாய் வாழ்க்கை
உலகம் சுற்றிலும் இல்லாததுபோல்
மழை தீர மகிழ்ச்சி கூட
துள்ளியாடும் பிள்ளைகள்;

போன துளி உனது
அடுத்த துளி எனதென
ஆழித்துளிகளைக் கைகளுக்குள்
அடக்குதல் கண்டேன்;

காற்றும் குளிர் கூட்டிட
வானமும் சூரியனும்
காதல் வண்ணக் கோலமிட
மாலையென் மனதை நிறைக்குது!

பிள்ளைகளுக்காய் இருப்பதா
உலகுக்காய் போவாதாவென
வானத்துடன் சிவக்கப் பேசிவிட்டு
கடல் மறைந்தது சூரியன்;

அன்னையின் அழைப்பும்
பிள்ளைகளை ஈர்த்தது;
நிலவு வரப்பார்த்தது
நானும் அங்கே கலைந்தேன்;

அன்புடன்,
நம்பி.பா.

Sunday, December 31, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
------------------------------------

பழையன கழிதலும் புதியன புகுதலும்
எண்ணிப் பார்க்க இன்னொரு வாய்ப்பு!
சொல்லில் பார்த்தது போதும்
செயலிலும் பார்க்க முயலலாமே!

அல்லும்பகலும் தெருக்கல்லாய்
நாம் இருந்தது நேற்றோடு போகட்டும்!
இன்றிலிருந்து விழிக்க முயலுவோம்!
இமைக்க மறுக்கிறோமா நாம்
விழிக்க மறுப்பது சரியா?

மெத்தப் படித்திருக்கிறோம்
அனைத்தையும் அறிந்திருக்கிறோமென்றே
எத்தனை நாட்கள்தாம்
ஏமாந்து கொண்டும் நம்மையே
ஏமாற்றிக் கொண்டும் இருப்பது?

ஏற்றத்தாழ்வுகள் அழிக்க முடியுமா?
துன்பங்கள் போக்க முடியுமா?
உலகை மாற்ற முடியுமா?
கேள்விகளின் இயலாமைகளை
இன்றிலிருந்து புறந்தள்ளுவோம்!
அவற்றின் நியாயங்களை அல்ல!

எண்ணத்தின் பாதையில்
நம்மைப் போல்
அடுத்தவரையும் நடத்திடுவோம்
சரிநிகர் சமானமாய்
எண்ணிப் பார்க்க முயன்றிடுவோம்!

நம்மை நம் சிந்தனையை
மாற்றிப் பார்ப்போம்
உலகம் மாறாமலா போய்விடும்!!
நம் எண்ணத்தினூடாய்

நல்லுலகாய் மாற்றத் துவங்குவோம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நம்பி.பா.