ஓரிரு மாத இடைவெளிக்குப் பின் எழுத
நேரம் கிட்டியிருக்கிறது, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த
"அன்புடன்" குழுவினர் நடத்திய கவிதைப் போட்டியில்
இரு படங்களுக்காக நான் எழுதிய கவிதைகள் இதோ!
எனது கவிதைகள் பரிசுப் பட்டியலில்
இடம்பெறவில்லையெனினும், மிகச்சிறந்த கவிதைகளுக்கு
அளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி!
போட்டியை திறம்பட நடத்தி, முக்கியமாக, நேரத்தையும்
சிந்தனையயும் பயனுற செலவிட்டு, போட்டிகளை
நடத்திய குழுவினருக்கு எனது நன்றி! வாழ்த்துக்கள்!
இரு படங்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளில்
முதலாவது! கவிதைக்கான படமும் இணைத்துள்ளேன்.
ஆனந்தக் களி நடம்
---------------------------
இந்தச் சிறுமியின்
கண்களில் எத்தனை நட்சத்திரங்கள்,
காலையின் வெளிச்சம்
இவளின் முகத்தில் பிரகாசமாய்.
ஆடையின் வண்ணங்கள்
ஆனந்தம் தவிர வேறேதும் பேசவில்லை!
பார்வையின் கவர்ச்சி காட்டுது
அப்பழுக்கற்ற உண்மையை!
அமைதியின் பார்வை
இவளின் பார்வை;
ஆனந்தக் களிநடம்
இவளின் முகம்;
அலையறு நடுக்கடலின் அமைதி
இந்த முகத்தைக் காணக் காண!
இவள் காலங்கள் கடந்த
நம் கலாச்சாரத்தின் வடிவமா?
பூக்கள் தோற்கும்
இந்த மழலை முகம் கண்டு!
வாடாமல் காப்பது
உலகின் கடமையன்றோ?
குழையும் மனது
மழலையின் வெகுளிப் புன்னகையில்,
இது புன்னகையா? சிரிப்பா?
கேள்வியில் மயங்குதென் மனம்!
---------------------------14 ஏப்ரல் 2007------