Tuesday, November 21, 2006

தனிமையும் உறவும்!

சிந்தனை என் தோழன்

தனிமை அதற்குப் பாதை

தனிமை எனக்கு இனிமை சில நேரங்களில்.

கேள்விகூடத் தோன்றுமெனக்கு

உறவு வந்தால் நாளை

என் செய்வேன் என் தனிமைக்கு?


வாழ்க்கையெனும் நாடகத்தில்

தனிமை கூட இரயில் சினேகமா?


உறவு கொணர்வது

வாழ்க்கைக்கு புதையல்தான்

அது தனிமைக்கு சுத்தியலாகலாமா?

எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்!


புதிதாய் ஒரு சிந்தனை

வார விடுமுறைபோல்

மாதத்தில் சில நாள்

தனித்தனியாய் தனிமைக்கு

ஏன் அழைப்பு விடக்கூடாது?


தனிமை நம்

முழுமைக்கு வழிகாட்டியாயிற்றே!

அமைதிக்கு உற்ற தோழமையாயிற்றே!

புதிதாய்த் தான் வாழ்ந்து பார்ப்போமே!


உறவுக்கு தனிமை

உண்மைத் தோழனென்பதை

உணர முயல்வோம் நாம்!


வருவோம் நாம் உறவோடு

தனிமையையும் மகிழ்வையும்

காண்போம் நாம் வாழ்வாய்!

என்ன சொல்கிறாய் என் உறவே?

அன்புடன்,

நம்பி.பா.

பிகு. திருமணத்திற்கு முன்பிருந்த வீரத்தால் என்றோ எழுதியது.

நீ யாருக்குத் தோழி!

நிலவெரிந்த இரவுகள்
நித்தம் என்
நெருப்புக்குத் துணையாயின.

மனம் நிறைந்த
கணங்களை எண்ணுங்கால்
நான் மறுபடி உடைகிறேன்.

நீயென்ன
நெருப்புக்குத் தோழியா
இல்லையென்
நெஞ்சுக்குத் தோழியா?


அன்புடன்,
நம்பி.பா.




மை(யல்) விழி

அஞ்ஞனம் கொண்ட விழியிரண்டும்
நெஞ்சினில் பாயுது
நெருப்புக் கணைகளாய்!

அஞ்சிடும் என் நெஞ்சு
காதலின் வீச்சு கண்டு!

வெஞ்சினம் கரையும்
ஒரு நொடிப் பார்வையில்
என் மனமோ உருகுது
அனலிடை மெழுகாய்!

காப்பாற்ற வரச்சொன்னால்
கரைக்க வருகிறாயே!
உன்னுள்ளே கரைத்துவிடு!
உயிருள்ளே சேர்த்துவிடு!

அன்புடன்,

நம்பி.பா.


--ஜூலை 18 2000-இல் எழுதியது.