Saturday, November 11, 2006

பாரதி பாரதிதான்!

எத்தனை முறை படித்தாலும்
அதே வீச்சு, அதே கூர்மை!!

எத்தனை முறை,
எத்தனை பேர்,
எத்தனை விதம் சொன்னாலும்
பாரதி பாரதிதான்!

தமிழ் வாழப் பிறந்தவன் பாரதி
தான் வாழாமல் வாழ்ந்தவனை
அன்று கைவிட்டோம்!
இன்றவன் வார்த்தைகள்
நம்மை வாழ வைக்கின்றன!

எல்லோருக்கும் நல்லன
எல்லாம் கிட்டிட எண்ணிய
அவனை என்றும் மறவோம்!

ஒவ்வொரு நாளிலும்
பாரதியை நாம்
நாளின் முதல் மூச்சாய் கொள்வோம்!



பாரதியின் ஒரு சிறு கவிதை!

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

முதல் பதிவு முயற்சி

வைகறை வானம்!

முதற்கண் இணையத்தின்பால்
தமிழை உலவவிட்ட
தமிழார்வலர் அனைவருக்கும்
என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!
உங்களின் முயற்சி
இன்று தமிழின் வளர்ச்சி!


வைகறை வானத்திற்கு
என் அறிமுகம் பெரிதல்ல!
எனக்கு வைகறை வானம் பெரிது!

கதிருக்கு கட்டியம் கூறி
இருளை வழியனுப்புவது
வைகறை வானம்!

விடியலின் பாதையை
உறுதியாய் கண்ணுக்கு காட்டுவது
வைகறை வானம்!

வானத்தின் வண்ணக்கோலங்களில்
என் எண்ணந்தனை
பெரிதாய் கவர்ந்தது
வைகறை வானம்!

எண்ணத்தின் போக்கிலே
என்னென்ன தோன்றுகிறதோ
எழுதப் போகிறேன் இந்தப் பக்கங்களில்!

அன்புடன்
நம்பி.பா.