Tuesday, April 28, 2009

காதலின் நீண்ட விழியசைப்பில்காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.

எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.

காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.

புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.

பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.

அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.

கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.


மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.


எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!

Friday, April 17, 2009

பூக்களின் பாதையில் புன்னகைக்க மறந்த விழிகள்...

ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்
அழியாத விளக்கென்பதுவும் பொய்,
மாற்றமென்பதே ஒரே மெய்.

மாற்றத்தின் பாதையில்
ஏமாற்றத்தின் சுவடுதனை
மெல்ல நுழைக்கும்
பொய்யான வாக்குறுதிகள்
பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,

தேவைகளுக்கான
விளக்கங்களும் மாறி இருக்கும்.

மாற்றம் பொய்யிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.

அன்று பூக்களின் பாதையில்
புன்னகைக்க மறந்த விழிகள்
பொய்யாய்ப் போய்விடும்.

அலையடித்த கரையில் நிற்கும்
நுரைத்த மணலாடாத கால்கள்
பொய்யாய்ப் போய்விடும்.

மாற்றத்தின் தேவையையும்
உணர மறுக்கும்
ஏமாற்றச் சிந்தனைகளை
விலக்கக் கற்றுக் கொண்டால்
பிரிந்திருக்கும் மாடுகள் கூடக்கூடும்.
அவை கூடி நின்றால்
வாடிய வயிறுகளுக்கும் உணவு கிட்டும்;

ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையுமே
சிந்தனையில் ஏந்தி ஏந்தி
மழுங்கிய மூளைகளுக்குள்
முட்களும் மலரும்.
குனிந்த முதுகுகள் நிமிரும், நிமிர்ந்தால்
முட்டிய கட்டைகளும் முறிந்து போகும்;

அப்போது மாற்றம் விதியிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.
விதிப்பயனுக்கான
விளக்கமும் மாறி இருக்கும்.

ஏற்கனவே எழுதியது:-
விதியும் வாழ்வின் விதையும் - http://vaigaraivaanam.blogspot.com/2008/09/blog-post.html

Tuesday, April 7, 2009

நீதான் தலைவனே (அ) அழுகிய முட்டைகள் கலைக்க முயலும் கனவுகள்

நீதான் தலைவனென்றே
நால்வர் சொன்னர் என்னிடம்.

விழிகள் விரிந்தன
புருவங்கள் உயர்ந்தது
தலை கொஞ்சம் கனத்தது
இருந்தும்
கால்கள் வானில் பறந்தன.

என்னைச் சுற்றி
ஒளிவட்டம் தெரிகிறதாவென
எனக்கொரு சந்தேகமும் வந்தது.
யாரைக் கேட்பதென புரியவில்லை.

கூட்டமும் கூடியது என்னைச் சுற்றி
நால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.

இரத்தத்தின் இரத்தங்களே
உடன்பிறப்புக்களேயென
உரத்து அழைக்கத் தயாரானேன்.

எங்கிருந்தோ வந்தென்
முகத்தை நனைத்தது ஓர்
அழுகிய முட்டை!
ம்ம்.. என் கனவு கலைந்தது!
விடியலின் வெளிச்சமும் முகத்திலடித்தது!

இருக்கட்டும் காத்திருக்கிறேன்
இன்றின் இரவுக்காய்.
அடுத்த தவணைக் கனவிலாவது
கூடும் கூட்டத்திற்கு லெக்பீஸூம்
என் தலைமைக்கு
ஒரு பெட்டியும் தயார் பண்ணப் பார்க்கிறேன்.


பின்குறிப்பு:-

சுப்பிரமணியம் சுவாமிக்கு விழுந்த முட்டையும், சிதம்பரத்திற்கு கிடைத்த செருப்பும் வேறல்ல. தொடர்ந்து அடக்கப்பட்ட சிந்தனைக்கு எதிரான சிந்தனை வெளிப்பாடுதான். கூட்டமாய் கூடியவர்கள் (தமிழக வழக்குரைஞர்கள்), கூட்டமாக இருந்தாலும் இன்னமும் பொது மக்களுடன் முழுதாய்ச் சேராது தனியாய்த் தான் இருக்கிறார்கள். இல்லையெனில், அவர்களை அடக்கிட தமிழக அரசும், காவல்துறையும் துணிந்திருக்க மாட்டார்கள். அழுகிய முட்டைகள் தயாராய்த்தான் இருக்கின்றன, ஆனால் இன்னமும் தமிழக மக்கள் தயாராகவில்லையெனத் தோன்றுகிறது.

தமிழகத்தின் தேவை, அழுகாச்சி சீரியல்களோ, சூப்பர் சிங்கரோ, ஐபிஎல்லோ, டாஸ்மாக்கோ அல்ல! அழுகிய முட்டைகளின் தொடல் படல்தான், பலரின் தவறான கனவுகளைக் கலைத்திட! கொஞ்சம் துணிச்சலும் தேவை தான்! துணிச்சலென்பது வன்முறைக்கான வெறி அல்ல, தவறுகள் கண்டு சிந்திப்பதுவும் கேள்விகள் கேட்பதுவும்தான்!

பிகு2:- அழுகிய முட்டைகள் இதில் வெறும் குறியீடுதான், உண்மையான தேவை மக்களுக்கும் மக்கள் நலனுக்கும் சமூகத்துக்கும் எது முக்கியத் தேவையென்ற சமுதாயச் சிந்தனை மாற்றம்தான்.

Thursday, March 5, 2009

எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

ஒரு சாத்தானின் ஆட்சியிலே
இன்னொரு சாத்தான் என்ன செய்யும்?
சாத்தானின் காலை
சாத்தான் வாரும் வித்தைதானே?

எந்தச் சாத்தானும் இதில்
ஓயப் போவதில்லை!


விடியல் முதல் படுக்கை வரை
பிழைப்புக்கு வாழ்ந்து தினம்
போராடும் மக்களோ
ஒரு சாத்தானுக்கு வாக்களித்துப் பின்
அடுத்த சாத்தானை நோக்கி!


சாத்தான்களின் வித்தைகளில்
சிந்தனை இழந்து நீ
தீக்குளிப்பது தமிழையெப்படி
வளர்க்கும்? எரித்துவிடாதா?
போராடத் துணிந்த மனம்
தீயிலெரிந்து போவது சரியா?

பகுத்தறிவை தூர எறிந்துவிட்டாயோ?

அரசுப் பணத்தை அள்ளியிறைப்பர்
தீக்குளிப்பவனை வீரனென்பர்
தெருத் தெருவாய் தமிழ் கூவி விற்பர்
இந்தச் சாத்தான்களின் தமிழ்த்தீ
மக்களைத்தான் எரிக்கும்!

சாத்தான்களில் பலவகை;
பகுத்தறிவை தூர எறிந்த நீ
தமிழகத்தை திரும்பப் பார்
நிச்சயம் நம்புவாய்!

தன் வீட்டைக் கோட்டையாக்கி
பணத் தோட்டமாக்கிப் பின்
ஊரான் பிணம் தின்னும் சாத்தான்கள் இவை!
இதில் எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?

பின்குறிப்பு:- நாடொறும் நாடி முறை செய்யா - மு.க வும், ஜெவும், இவர்களைச் சூழ்ந்த மற்ற தமிழக பிழைப்புவாத அரசியல்வாதிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். நாடகக் களம் இதுவே, இவர்களுக்கு தேவை கிடைக்கப்போகும் வாக்குகள் மட்டுமே, பற்றியெரியும் உயிர்கள் பற்றிய சிந்தனையல்ல. தீக்குளிப்பது தவறு, தேவையில்லாததென மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் தெளிவும் இவர்களுக்கில்லை. தமிழையும் பகுத்தறிவையும் விற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், அவை பற்றிய அறிவே இல்லாமல் வந்த ஜெவையும் தவிர இப்போதைக்கு வாக்களிக்க யாரும் இல்லையென்பது, தமிழக மக்களின் ஒரே வழியா இல்லை அறிவின்மையா? மக்கள் கூடிப் போராடினால் தான் மாற்றம் வரும், வெளியிலிருந்து வரப்போவதில்லை. இன்றைய இந்தச் சாத்தான்கள் வேறெங்கிருந்தும் வரவில்லை, நம்மிடமிருந்துதானே?

இப்போதைக்கு ஈழத் தமிழர்களின் நிலையிலும் பெரும் தேக்கமே. நிச்சயம் இந்தியத் தேர்தலும் அரசியல்வாதிகளின் வாக்குத் தேவையும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. தேவை, அமைதியும் மறு பேச்சுவார்த்தைகளும்தான். தன்னுரிமை இல்லாவிட்டாலும் சம உரிமை கிட்டினாலும் அமைதி உடன் நிச்சயம் திரும்பிவிடும். புலிகளின் போக்கிலும் நோக்கிலும் மாற்றம் தேவை, போராட்டங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு மட்டுமாய் அனைவரும் மட்டுப்படுத்தினால் தீர்வு நிச்சயம். சிங்களப் பேரதிகாரம் எவ்வளவு வலி தரும் உண்மையோ, தமிழ்ப் புலிகளின், மற்றைய தமிழ்க் குழுக்களின் உள்ளெதிர்ப்பு நிலைகளும் அவ்வளவு வலி தரும் உண்மையே! இரண்டுமே (ஈழத்) தமிழ் மக்களின் நலனுக்கு என்றும் முழுப்பகையாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்:-
சென்னை: சாத்தானான ஒரு பெண்மணியை (ஜெயலலிதா) தமிழகத்தை மேய விட்டுவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்று தான் யோசிக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் உஜாலா:- இலங்கை: ஜெ. உண்ணாவிரதம்-10ம் தேதி சென்னையில்..!

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html
அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்? - http://vaigaraivaanam.blogspot.com/2009/01/blog-post.html

Thursday, February 12, 2009

மனிதன் கடவுளின் படைப்பெனும் பழங்கதையை அறிவியலால் மறுத்த சார்லஸ் டார்வின்!

இன்று பிப்ரவரி 12 2009, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இயற்கைத் தெரிவின் வழியான உயிர்களின் தோன்றுதலைப் பற்றி அறிவியல்
சார்ந்த ஆய்வுகளால் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வினின் 200-வது பிறந்த நாள். 1809இல் பிரிட்டனில் பிறந்த டார்வினின் முக்கிய ஆராய்ச்சி நூலான 'உயிரினங்களின் தோற்றம் - Origin of Species by Means of Natural Selection' வெளியிடப்பட்டதன் 150ஆவது ஆண்டு நிறைவும் இந்த ஆண்டு வருகிறது.

எல்லாம் வல்ல கடவுளாலோ, மேலே இருக்கும் வேறு எவராலோ உலகம் படைக்கப்பட்டது, உயிர்கள் ஆக்கப்பட்டது, மனிதன் உருவாக்கப்பட்டானென்ற காலம் காலமாய் கதையாய் கட்டி வந்திருந்த பழம் நம்பிக்கைகளை, வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதர்களில் அறிஞர்கள் கேள்வி கேட்டு வந்திருந்தனர். கடவுளின் படைப்புதான்
மனிதனென்ற கருத்தை தர்க்க ரீதியாக முற்றிலும் மறுத்தும் பழித்தும் வந்திருந்தனர்.

ஆனால், உலகின் உயிர்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும் உருவாகின, அவை இயற்கைத் தெரிவு என்னும் வாழ்வியல் தேவைகளால் வளர்ந்து வந்தன; அவ்வாறே, குரங்குகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுப் பரிணாம மாற்றங்களினாலே மனிதன் உருவானான் என்ற கருத்தை தனது பல ஆண்டு கால (கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால)
ஆழ்ந்த தொடர் ஆராய்ச்சிகளின் முடிவாக 1859-இல் உலகுக்குத் தெரிவித்தவரே டார்வின். இன்றைய அறிவியலின் முன்னோடியெனவும் சொல்லலாம்.

கடவுள் ஏழே நாட்களில் உலகத்தைப் படைத்தார், உலகம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது, கடவுளே உலகின் ஒவ்வொரு உயிரின் வடிவத்தையும் படைத்தார், மற்றும் அந்த வடிவங்கள் மாறாதவையென்றே அறிவித்துவந்த பைபிள்களினை ஆதாரமாகக் கொண்ட கிறித்துவத் திருச்சபைகளின் கருத்துக்களுக்கு மாறாக, உலகம் பல்லாயிர ஆண்டுக் காலத்துக்கு முன்னரே உருவானது, மனிதனின் உருவாக்கம் பல உயிர்களின் வாழ்க்கை வழியாய் வந்த பரிணாமத்தின் மாற்றம் வளர்ச்சியென்று டார்வின் அறிவித்தது, இன்றிருக்கும் பல அறிவியல் முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாக இருக்கிறதென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

சொல்லப்போனால், 'பரிணாம வளர்ச்சியெனும் அறிவியல் கருத்து இல்லாமல், இன்றைய அறிவியல் என்பதே இல்லையெனலாம்!'. உதாரணமாக, எய்ட்ஸ் (AIDS) எனும் எச்ஐவி (HIV) கிருமியை தடுக்க ஒழிக்க உருவாக்கப்படும்
மருந்துகளை, அந்த கிருமிகள் தனது ஒரு வடிவத்திலிருந்து மறு வடிவத்துக்கு மிக வேகமாக பரிணாம வளர்ச்சியடைகிறதென்ற அடிப்படை அறிவு இல்லாமல் உருவாக்கவே முடிந்திருக்காது, உயிர்களைக் காக்கவும் முடிந்திருக்காது.

இன்றைய மேற்கத்திய நாடுகளில் கிறித்துவ மதப் பழமைவாதிகளின் முக்கிய எதிரியாக இருப்பவர் டார்வின்தான், அவரின் கருத்துக்கள், திருச்சபைகளின் பழமைவாதக் கருத்துக்களுக்கு பெரும் மாற்றுக் கருத்தாக இருக்கிறது. 'கிரியேஷனிஸம் - Creationism', 'சயன்டாலஜி - Scientology' போன்ற பழமைவாதக் குழுக்கள், டார்வினின் பரிணாமக் கொள்கையை எவ்வாறாகிலும், போலிக் கருத்தென்ற நிலைப்பாட்டை அதன் மீது உருவாக்கி அழித்திட வேண்டுமென்ற வெறுப்புடன் முயன்று கொண்டிருக்கின்றன.


முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், பரிணாமக் கொள்கையை மறுப்பதுடன், தான் மறுபடியும் கிறித்துவராகப் பிறந்தவரெனும் நம்பிக்கையும், தன்னுடன் இயேசு பேசுவதாகவும் தெரிவித்தவர். இவரது எட்டாண்டு ஆட்சிக் காலம், அமெரிக்காவின் அறிவியல் துறை சார்ந்த திட்டங்களுக்கு எந்த விதமான உதவியும் ஆதரவும் அளிக்காதது மட்டுமல்லாமல், அறிவியலாளருக்கும் பெரும் சோதனையான காலகட்டம்தான். மேலும் குடியரசுக் கட்சியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோற்ற சாரா பேலின் (Sarah Palin), கிட்டத்தட்ட அதே கருத்துக்களைக் கொண்டவர்தாம். டார்வினை மறுப்பது மட்டுமல்லாமல், கிறித்துவப் பழமைவாதத்தில் மறுபடியும் மூழ்குவதற்கான மதப் பழமைவாதிகள் இன்றைய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகார மட்டத்தில் பெருமளவில் இருக்கிறார்களென்பது முற்றிலும் உண்மை.

இந்தியாவில் சங் பரிவார் எவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும், சமுதாயக் கருத்துக்களில் பழமைவாதத்தைப் புகுத்த நினைக்கிறார்களோ, அதே விதமாகத் தான் இங்கே அமெரிக்காவில் கிறித்துவக் குழுக்கள் கிறித்துவப் பழமைவாதத்தைப் புகுத்த முழுதுமாய் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில், பள்ளிகளில் பரிணாமக் கொள்கையை பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதே இல்லை. கிரியேஷனிஸம் எனும் பரிணாமத்தை மறுக்கும், பைபிள் வழி மனிதன் கடவுளினால் படைக்கப்பட்டது பற்றியே கற்றுத் தரப்படுகிறது. அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சார்ந்த லூஸியானா ஆளுநரான பாபி ஜிண்டால் ( இவர் இந்திய வழித் தோன்றல், பஞ்சாபிய குடும்பத்தவர், பள்ளிப்பருவத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்துவராக
மதம் மாறியவர்), கடந்த ஜூலை 2008இல் இயற்றிய சட்டத்தின்படி, லூஸியானா மாநிலப் பள்ளி வகுப்புகளில், பரிணாமக் கொள்கையை தவறெனக் கூறும் பாடங்களை பள்ளிப் புத்தகங்களிலும் பாடங்களிலும் வைக்கலாமென உத்தரவிட்டுள்ளார்.

மேலும் டெக்ஸாஸ் மாநிலத்தில், எல்லா பள்ளி ஆசிரியர்களும் பாடத்திட்டத்தின் பகுதியாக, பரிணாமக் கொள்கையை மறுத்துத் தாவரவியல் பாடங்களை நடத்த வேண்டுமென்பது குறித்து, டெக்ஸாஸ் கல்வி நிறுமத்திற்கும், அறிவியல் குழுவினருக்குமிடையே பெரும் வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பரிணாமக் கொள்கையை மறுப்பதே, கடவுள் மறுப்புக் கொள்கைகளினை எதிர்த்து அழிப்பதற்கான வழியென்று, பழமைவாதக் கிறித்துவச்சபைகளும், அது சார்ந்த குழுவினரும் நம்புவதே இவற்றிற்கெல்லாம் காரணம். இவர்களிடையே,
டார்வினும் அவரது கருத்துக்களும் முழு எதிர்ப்பையும் வெறுப்பையும் பெறுவதற்கு அவர்களின் பழமைவாத நம்பிக்கைகளே காரணம். இன்றைக்கு, இணையத்தில் டார்வின் பற்றிய தகவல்களைத் தேடினால், அவரின் பரிணாமக் கொள்கையை அறவே வெறுக்கும், அதே நேரத்தில், கிறித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் கருத்துக்களையும் ஒருங்கே காணலாம்.

கலிலியோ காலத்தில் அவரைச் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தியது
போல் டார்வினைக் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும், டார்வின் அவரின்
வாழ்காலத்திலேயே திருச்சபையினரால் பெரும் துயருக்குள்ளானவர்தாம். பிரிட்டனின் கிறித்துவத் திருச்சபை, அவரை நடத்திய விதம் குறித்தும், அவரின் பரிணாமக் கொள்கைகளை எதிர்த்ததையும், தவறெனத் தெரிவித்து அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு கிறித்துவப் பாதிரிமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்தப் பாதிரியாரின் கருத்தை அவரின் சொந்தக் கருத்தென்றும், டார்வினுக்காகவோ அவரை நடத்திய விதத்திற்காகவோ திருச்சபை மன்னிப்புக் கேட்கத் தேவையில்லையென்றும், திருச்சபையின் பேச்சாளர் உடன் கருத்துத் தெரிவித்திருந்தார். அன்று டார்வினின் அறிவியல் அணுகுமறையை எதிர்த்த கிறித்துவ பழமைவாதம், இன்றும் எதிர்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவரின் கொள்கைகளையும், அறிவியல் ஆராய்ச்சிக் கருத்துக்களையும் முழுதாய் மூடி மறைக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே, அறிவியலாளர்களும், சார்ந்தவர்களும், டார்வினின் 200ஆவது பிறந்த தினத்தை மிகவும் பெரிதளவில் கொண்டாடுகின்றனர்.

அறிவியலுக்கும், உயிர்களின் இயற்கை வாழ்வியலுக்குமான காரணங்களை தெளிவான ஆராய்ச்சிகளின் வழியாக உணர்த்திய டார்வின், உலகையும் மூட நம்பிக்கைகளையும், பழமைவாதக் கருத்துக்களையும் மீறி நடக்க வழியமைத்திருக்கிறாரென்றால் அது முற்றிலும் உண்மையே!!
அறிவியலால் இன்று முன்னேறும் உலகமே அதற்குச் சாட்சி!

டார்வினுக்கு நன்றி சொல்லுமுகமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

டார்வின் குறித்த எனது பழைய பதிவு: - இணையத்தில் டார்வினின் எழுத்துக்கள் -

சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்


மேலும் படிக்க:-

http://revcom.us/a/156/Darwin_Day-en.html

Church owes Darwin apology over evolution, says senior Anglican
http://www.guardian.co.uk/world/2008/sep/15/anglicanism.evolution

பார்க்க: பரிமாணம் குறித்த டார்வினின் அறிவுப் பயணம்.


Thursday, January 22, 2009

அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்?

முறம் கொண்டு எதிர் நின்ற
தமிழ் மறப் பெண்களின்
வழி வந்தோமென்ற
பழம் பெருமையில்
கால் வழுக்கி நிற்கின்றாயே
அய்யகோ தமிழா,
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பேசுவதோ சமத்துவம்
சுவாசமெல்லாம் பேராசை;
வளர்ப்பது தோட்டம்
வாழவைப்பதோ குடும்பம்
இவர்கள் விற்பது மட்டும் தமிழா?
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இந்த வசனமே போதும் தேர்தல்களுக்கு!
கேள்வி கேட்க வரும் வாய்க்கோ
வாழையிலை விருந்தும்
இலைக்குக் கீழே ஓராயிரமோ ஈராயிரமோ!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

பொறுப்பாய் தமிழா
வரும் தேர்தலுக்கு முந்தைய நாள்
பதவி துறப்போம்
வரும் அகதிகள் கணக்கையும்
முழுதாய் மறைப்போம்.
மகக் குளத்திலும் மஞ்சள் மகிமையிலும்
மக்களின் நலனையெல்லாம்
முழுக்குக் கொடுப்போம்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

ஈரமென்றால் கண்ணெண்போம்
ஈழமென்றால் என்னென்போம்
பதவி கிட்டுமாயின்
தமிழர்க்கு தலையென்பார்
தலைப்பாகைச் சுமைகளிவர்களை
தலையாலே சுமக்கின்றாய் நீ தலைமுறைகளாய்!
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!

முறச் சீற்றம் மறந்து
அறச் சீற்றம் பேசுவாரிவர்
நாளை தேர்தலென்றால்
இன்று மட்டும்
அரிவாள் சீற்றம் கொள்வதோடு
தோளோடு தோள் நின்று
டாஸ்மார்க்கில் உள்ளதடா தமிழென்பார்
அய்யகோ தமிழா
இதென்ன தமிழ்ப் பண்பாடா?
சொல் தமிழா!


பின்குறிப்பு:-
இன்று தமிழக அரசவையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால், இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரி இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தீர்மானத்தைப் பற்றிய தகவலைப் படித்ததின் உந்துதலே இந்தக் கவிதை. இது மட்டுமல்ல, இலங்கை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் மற்றும் மற்ற முக்கிய தமிழகத் தலைவர்களின் பொய்யான போக்குகளின் மிகுதியாலும் இந்தக் கவிதையெனலாம்.

புலிகள் மட்டுமே இலங்கைத் தமிழர்களல்ல, அப்பாவி மக்களின் நிலையைப் பற்றிப் பேசினாலே புலிகளைக் காப்பாற்றப் பேசுவதாகப் புரட்டித் திரிவதும், பயந்தும் பயமுறுத்தியும் பேச முயல்வதுவும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமாகிவிட்டது. இவர்களினால் வெறுமனே உருவாக்கப்படுவது உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமேயன்றி வேறென்ன? இது கோமாளித்தனமேயன்றி வேறென்ன?

நடப்பது உள்நாட்டுப் போர் தான், சம உரிமைக்கான போராட்டம், பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லையென அமெரிக்கா வந்து சொன்னால் ஏற்பவர்கள் இவர்கள். மக்களின் நிலையிலும், நாடு கடந்து வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலையிலிருந்து எண்ணிப் பார்ப்போமே, இடையில் அகப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு பொது உலக நிறுவனங்களைக்கூட இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதேன்? புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் மட்டும் தேவையானதல்ல உரிமையும் விடுதலையும், இலங்கையின் தமிழர்களுக்கும் தானே அது தேவை? புலிகள் மட்டுமே இலங்கை அரசிற்கு பிரச்சினை இல்லை, அதற்குப் பின்னால் காத்திருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான சம உரிமைப் போராட்டத்திற்கான தீர்வைத் தரத் தயாராயில்லாத சிங்கள அரசின் பெரும்பான்மை மனப்பான்மை தான் முக்கியக் காரணம். அது மாறாதவரையில் உண்மைத் தீர்வு கிட்ட வழியில்லை!

தொடர்புடைய இணைப்பு;-
http://thatstamil.oneindia.in/news/2009/01/23/tn-assembly-to-issue-final-request-to-centre.html

தொடர்புடைய எனது முந்தைய பதிவுகள்
இலங்கை நோக்காத தமிழ் நண்டுகள்! - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_25.html
இலங்கை நிகழ்வுகள் - வரலாற்றில் இது வரை - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_30.html
இலங்கை நிகழ்வுகள் - இது வரையிலிருந்து இனி மேல் - http://vaigaraivaanam.blogspot.com/2008/11/blog-post_2561.html