Wednesday, November 29, 2006

நல்லார் ஒருவர்-1 www.charactercounts.org

வள்ளுவன் வாக்கு:-
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

உண்மையோ பொய்யோ, ஒழுக்கத்திற்கும் அறநெறிக்கும் பெயர் போன
நாடு நம் தாயகம் என்று என்னால் அடிக்கடி சொல்லிக் கொள்ளாமல்
இருக்க முடியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது மாறிலி (constant)
அல்ல, ஒப்புநோக்குதலின் அடிப்படையில் தான்! சக மனிதர்களை
மதிக்கத் தெரிவதும் அவர்களின் நல்லுணர்வை புரிந்துகொள்ளுதலுமே
இன்றைய உலகின் பேரொழுக்கங்களாகும்.

வாழ்வியல் ஒழுக்கநெறிக்கு (ETHICS) சம காலத்தில் வாழ்பவர்களில்
பலரை நாம் எடுத்துக்காட்டாய் காட்டலாம், நம் நாட்டில் மட்டுமல்ல,
பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையிலுள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும்
கூட எடுத்துக் காட்டலாம். அதில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கநெறி
கற்றுக் கொடுப்பதையே தன் முழு முதல் கடமையாக வைத்திருக்கும்
அமெரிக்காவில் வசிக்கும் லாஸ்ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த
"மைக்கேல் ஜோசப்சன்" (Micheal Josephson) என்பவர் இன்றைய
வழிகாட்டிகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை நிச்சயம் பிடிப்பார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தனது முழு நேர தொழிலாக
ஒழுக்கத்தை மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்திற்கும்

கற்றுக் கொடுக்கிறார் திருவாளர் ஜோசப்சன் அவர்கள்.
ஜோசப்சன் ஒழுக்கநெறி நிறுவனம் (Josephson Institute for Ethics) என்ற
இலாபம்-சாரா (non-profit) நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.
பிள்ளைகள் வளரும் பருவத்திலே அவர்களுக்கு ஒழுக்கத்தை

கற்றுக் கொடுத்து, நல்ல குடிமகன்களாய் மாற்ற வழிகாட்டும் இந்த
பெருஞ் செயல், உலகத்தை ஒரே நாளில் மாற்றியமைக்காது
என்றாலும், நாளைய சமுதாயத்தை ஒரு நல்லதொரு சமுதாயமாக

உருவாக்குவதற்கான ஒரு நல்ல செயல் என்பதில் சிறிதும்
சந்தேகம் இல்லை. இவரின் நிறுவனம் இன மற்றும் மத
சார்பு இல்லாத ஒரு நிலையில்தான் ஒழுக்கத்தை கற்றுக்
கொடுக்கின்றது.

அவரின் வலைத்தளம் :-
http://www.charactercounts.org/
கீழ்வரும் ஆறு அடிப்படை கொள்கைகளைத்தான் அவர்
மாணவர்களுக்கு முக்கியமாகக் கற்றுக் கொடுக்கிறார்.
1) நம்பிக்கைக்கு உரியவராய் இருத்தல் (Trustworthiness)
2) பிறரிடத்தில் மரியாதை (Respect)
3) பொறுப்புணர்ச்சி (Responsibility)
4) கண்ணியமாய் இருத்தல் (Fairness)
5) பிறரிடத்தில் கனிவு (Caring)
6) நல்ல குடிமகனாய் இருத்தல் (Citizenship)
ஆறு கொள்கைகள்:- http://www.charactercounts.org/defsix.htm

இது தவிர Work Ethics (வேலையிட ஒழுக்கம்) குறித்தும்
வகுப்புகளை நடத்துகிறார். தினம் ஒரு முறை உள்ளூர்
வானொலியில் பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசுகிறார்.
இந்த சுட்டியில் நுழைக :- http://www.charactercounts.org/knxtoc.htm

பணம் சம்பாதிக்க பல நூறு வழிகளிருந்தும், அதையெல்லாம் விடுத்து,
நாளைய சமூகத்திற்கு வழிகாட்டியாக, நமக்கெல்லாம் ஒரு
முன்னுதாரணமாய் இருக்கும் மைக்கேல் ஜோசப்சன் அவர்களுக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

தொடர்புடைய வலைத் தளங்கள்:-
முக்கிய வலைப்பக்கம் :-
http://www.charactercounts.org/
ஆறு கொள்கைகள் :- http://www.charactercounts.org/defsix.htm
வானொலி பேச்சு :- http://www.charactercounts.org/knxtoc.htm

அன்புடன்,

நம்பி.பா.

பிகு. இந்த பதிவு http://nallathunadakattum.blogspot.com/ பதிவில் மறுபதியப்பட்டுள்ளது