Sunday, November 15, 2015

கவிதைகள் விதைகளாய்

அன்பு வணக்கங்கள்!

கொஞ்சம் கொஞ்சமாய் காதலும் கவிதையும் இன்ன பிறவும் எழுதத் துணிந்து, சில எழுதி, அவற்றை தனியொரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். என்றேனும் ஒரு நாள் ஒரு அழகிய நிகழ்வை கவிதையாய் எழுதும் முயற்சியின் துவக்கம் இது.  இந்த வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள்.   http://www.kavithai.us/

-நம்பி. பா.

Tuesday, November 13, 2012

வாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்!


தீபாவளி வாழ்த்துக்கள்!!

சிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடைக்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.

தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக சதுர்த்தியென நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதை கொண்டாடும் விதமாக, வடக்கில் இராமன் இராவணனை வென்று தனது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை மகிழ்ந்து கொண்டாடும் விதமாக, மேற்கில் காளியை வணங்கும்விதமாக, இலட்சுமியை வணங்கும்விதமாக, புத்தாண்டுத் தொடக்கமாக, இன்னமும் பலவிதமான காரணங்களுடன் இந்து மதத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தில் மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீக்கியமதத்திலும் அவர்களது ஆறாவது குரு 'குரு ஹர்கோபிந்த்' சிறையிலுருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறுமாறும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இவையனைத்திலும் பொதுக் கருத்தாக, தீயனவற்றை நீக்கி நல்லனவற்றை முன்னிறுத்தும் அடிப்படைக் கருத்தில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை கால முடிவை முன்னிறுத்துமாறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குளிர்காலத்தின் துவக்கத்தை நினைவுறுத்துமாறும், குவியும் இருளினைப் போக்கி ஒளிதர, விளக்குகளை ஏற்றியும், ஒளி/ஓலி தரும் பட்டாசுக்களை கொளுத்தியும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைப் போன்றே, உலகின் மற்ற கலாச்சாரங்களிலும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இதே கருத்தையொட்டி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இங்கே அமெரிக்காவில் மிக பெரிதாக இன்று கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையின் அடிப்படைக் கருத்தும், கொண்டாடப்படும் காலமும் இதுவே. இந்த ஹாலோவீன் பண்டிகையின் மூலமாக பழைய பேகன் மற்றும் செல்டிக் கிரேக்க ஷாமன் பண்டிகைகளான 'முன்னோர் வழிபாடும்' கிட்டத்தட்ட இதே விதமாக, தீயனவற்றை நல்லவை வெல்லும் கருத்தோடும், ஒளியூட்டியும் கொண்டாடப்படுகிறது. இவையெல்லாமும் அறுவடை கால முடிவை முன்னிறுத்தமாறும் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

இந்த சிந்தனையை இன்னமும் கொஞ்சம் நீட்டித்தால், எனது பாட்டனாரின் நினைவுப்படி, தமிழகத்தில் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையே அல்ல, பொங்கல் மட்டுமே மக்கள் பண்டிகையாக, அறுவடைப் பண்டிகையாக இருந்தது. மேலும், போகித் திருநாளின் அடிப்படைக் கருத்து கிட்டத்தட்ட இந்த தீயன கழிந்து நல்லன சேர்த்தல்தான், இன்னமும் சொல்லப்போனால், அது பழையன கழிந்து புதியன புகுதலெனும் முதிர்ந்த கருத்தாகவும், நல்லன கெட்டனவென பாகுபடுத்தாமலும் இருக்கும் அடிப்படையில் பண்பட்ட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வழியிலானது!

பண்டிகையின்பாற்பட்ட உற்சாகமும், புத்தாடை, பட்டாசுகளும், திண்பண்டங்களும் உருவாக்கும் ஒளிர்ந்த சிந்தனை எல்லார்க்கும் மகிழ்ச்சி தருவதே, அவையே இந்த பண்டிகைகளை மிகவும் கொண்டாடத்தக்கவையாக மாற்றுகின்றன, அவையே பண்டிகைகளை மேலும் கூட்டுகின்றன.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

http://en.wikipedia.org/wiki/Diwali

http://en.wikipedia.org/wiki/Samhain

http://en.wikipedia.org/wiki/Halloween

Friday, January 8, 2010

மெத்தனங்களின் மேற்கூரையில் (அ) கெவின் கார்ட்டரின் புலிட்சர் பரிசு பெற்ற 'சிறுமியும் வல்லூறும்'

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note


மெத்தனங்களின் மேற்கூரையில்
மனம் தினம்
செத்துத் செத்துப் பிழைக்கிறது

மனம் ஒரு வல்லூறாய்
நானும் ஒரு மிருகமென்பதை
தினம் நினைவூட்டுகிறது.

வெற்றிடங்களின் மாளிகை நிரப்ப
விருந்துகள் வேடிக்கைகள்
இருந்தும் என்றும் நிரம்பா மனங்கள்

கொண்டாட்டங்களின் ஆர்ப்பாட்டங்கள்
அள்ளாமல் குறையாமல்
போதை காக்க முயல்கின்றன

பொய்களி்ன் பித்தலாட்டங்கள்
பகல்களையும் இரவுகளையும்
நறுமணத்தில் தூக்கி நிறுத்த

மணம் குறையும் கணத்திலோ
{பொய்களின்} திரைகள்
கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்தாய்

மனமும் ஒரு வல்லூறாய்
தினம் நிற்கும் கணங்கள் தவிர
மற்றெல்லாம் நலமாகவே,
உலகெல்லாம் சுகமாகவே!!

பின்குறிப்பு-
கெவின் கார்ட்டர் செப்டம்பர் 13, 1960 - ஜூலை 27, 1994

1994ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படப் பத்திரிக்கையாளருக்கான புலிட்சர் பரிசு பெற்ற தொழில்முறை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர், தான் எடுத்த படங்களின் பாதிப்பினாலேயே பின் தற்கொலை செய்து கொண்டவர்.

1980களின் நடுவே, தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுக் கலவரங்கள் தொடர்பான பல படங்களை எடுத்து அங்கே நிகழுவதை தான் பணியாற்றிய பத்திரிக்கை வழியாக உலகுக்கு காட்சியாக்கிய கெவின் கார்ட்டர், 1993இல் உள்நாட்டுக் கலவரம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டின் தென்பகுதிக்கு சென்று எடுத்த ஒரு புகைப்படம், உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளின் தொடர் விளைவே, பின்னாளில் கெவின் கார்ட்டரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது எனச் சொல்லலாம்.

தென் சூடானில், ஐக்கிய நாடுகள் அமைத்திருந்த உணவு முகாமை நோக்கி, குற்றுயிராய் தவழ்ந்து கொண்டிருந்த சிறுமியொருத்தியையும், அவள் இறப்பாளாவெனக் காத்திருந்த ஒரு வல்லூறு இரண்டையும் கண்ட கெவின் கார்ட்டர், காட்சியாக்கி, நிழற்படமாக்கிப் பின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு விற்றார். போராட்டத்திலும், வறட்சியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்து, பட்டினியால் உயிரிழந்து கொண்டிருந்த பத்திரிக்கையில் படம் வெளிவந்த பின், மக்களிடையேயிருந்து வெளிவந்த தொடர் கேள்விகளும் எதிர்ப்புகளும், நியுயார்க் டைம்ஸை, படமெடுத்தபின் வல்லூறை கெவின் கார்ட்டர் துரத்திய பின்னே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாரெனவும், அந்தச் சிறுமி பிழைத்திருக்கலாமெனவும் பதிலளிக்க வைத்தது.

ப்ளோரிடாவைச் சார்ந்த 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க்' எனும் ஒரு பத்திரிக்கை இந்த படம் பற்றி பின்வருமாறு எழுதியது. 'அந்தச் சிறுமி வதைபடுவதை முழுமையாக படமெடுப்பதற்காக, கேமராவின் லென்ஸை சரிசெய்தவர், இன்னொரு உயிர்க்கொல்லி மிருகமே, அவ்விடத்திலான இன்னொரு வல்லூறே'

The St. Petersburg Times in Florida said this of Carter: "The man adjusting his lens to take just the right frame of her suffering, might just as well be a predator, another vulture on the scene."

இந்த படம் மட்டுமல்லாமல் இது போன்ற பல படங்களையும் எடுத்த கெவின் கார்ட்டர், அவரது படங்களுக்கான எதிர்வினைகளும், அவரது வாழ்வில் நடந்த சில மாற்றங்களு
ம், அவரைப் பின்னாளில் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது. தற்கொலை செய்து கொள்ளும்போது, கெவின் கார்ட்டர் எழுதிய கடிதத்தின் ஒரு வரி -

வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note

கெவின் கார்ட்டர் மட்டுமல்ல, உண்மையில் நாமெல்லோருமே, நாளின் ஓரிரு கணங்களிலாவது அந்த வல்லூறாகவே இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ அல்லது அறிய விரும்பாமலோ தனி உலகத்தில் தானெனும் சிந்தனையில், உலகின் நிகழ்வை, போக்கை, வலிகளை உணர மனம் தயாராயில்லாத நிலையில்தான் இருக்கிறோம்.

தொடர்புடைய இணைப்பு;-
http://en.wikipedia.org/wiki/Kevin_Carter