என் தாய்மொழி தமிழ். தமிழ் இனிமையான மொழி, பழமையோடு இன்றும் புதுமையாய் தெளிவாய் உள்ள மொழி. தமிழ் தனிமொழி, தனக்கென இலக்கணமும், பல இலக்கியங்களும் கொண்டு காலம் தாண்டி நிற்கும் மொழி.
தமிழைத் தவிர எனக்கு ஆங்கிலம் தெரியும். என் தொழிலுக்கு முழுதாய் உதவும் அழகிய மற்றும் மிக இலகுவான மொழி ஆங்கிலம். தொழில்நுட்பத்தில் முன் உள்ள மற்றும் உலக அறிவை ஒன்றாய் இணைக்கும் முக்கிய புள்ளியில் உள்ளது ஆங்கிலம்.
அவை தவிர, கொஞ்சம் கொஞ்சம் இந்தியும் எனக்குத் தெரியும். தூர்தர்ஷன், சித்திரகார் மற்றும் திரைப்படங்களின் மூலமாய்அறிந்து கொண்ட மொழி இனிமையான இந்தி மொழி. கொஞ்சம் கொஞ்சம் மலையாளமும், தெலுங்கும் தெரியும். எல்லா மொழிகளும் அழகானவைதாம்!
இந்தியா என்ற கட்டமைப்பினையும், பெரும் நிலப்பரப்பினை அறியவும், அதன் ஆன்மாவை புரிந்துகொள்ள இந்தி தெரிந்தாகவேண்டுமென இந்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது எனக்கு ஏற்புடையதல்ல.
முட்டாள்தனமான, மற்றும் அதிகாரத்தைத் திணிக்கும் கருத்து அது. சிறு பிள்ளைகளுக்குக்கு அந்த இந்தியைத் திணிக்கும் நேரத்தில் உடற்பயிற்சியோ தொழிற் பயிற்சியோ கற்றுத்தந்தால் அவர்கள் மனமும் மகிழும், நாடும் நலம்பெறும். தேவையில்லாத மூன்றாவது மொழி எதற்கு?
கடவுளிடம் பேச சமஸ்கிருத்தால் மட்டுமே முடியும் எனும் ஆதிக்க வெறித்தனத்தைப் போலத்தான் இந்த ஆன்மாவை அறிய இந்தியால் மட்டுமே முடியும் என்ற பொய்க் கருத்தும் உள்ளது. கடவுள் ஒரு அனுபவம், அதற்கு பேச எந்த மொழியும் தேவையில்லை. அதுபோல் தான் இந்தியாவின் ஆன்மாவை அறிய இந்தியால் மட்டுமே முடியுமென்பது பெரும் பொய். வடக்கில் பாலியும், பிராகிருத மொழிகளும், தெற்கில் தமிழும் திராவிட மொழிகளும், அறியாததை இந்தியால் மட்டுமே அறியமுடியமென்பது ஏமாற்றுவேலை!
இது போன்ற பேச்சுக்களுக்கு ஆதாரம் கிடையாது. தயவுசெய்து நிறுத்துங்கள்!