இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ளபடி, ஏழாம் வகுப்புப் கேரளப் பாடப் புத்தகங்களில் வைக்கப்பட்டுள்ள "மதமில்லாத ஜீவன்" என்ற ஒரு பாடத்தின் ஆங்கில வடிவத்தைப் படிக்க நேர்ந்தது, அதன் "எனது தமிழாக்கம்"
-------------------
தமது மகனை பள்ளியில் சேர்க்க வந்திருந்த ஒரு தாய் தந்தையரை தனது எதிரிலான இருக்கையில் அமரச் செய்துவிட்டு, தலைமையாசிரியர் சேர்க்கைக்கான படிவத்தை நிரப்பத் துவங்கினார்.
தம்பி உனது பெயரென்ன?
"ஜீவன்"
நல்லது நல்ல பெயராக இருக்கிறதே! உனது தந்தையின் பெயரென்ன?
"அன்வர் ரஷீத்"
தாயின் பெயரென்ன?
"லட்சுமி தேவி"
சற்றே தலையை உயர்த்திய தலைமையாசிரியர், பிள்ளையின் பெற்றோரை நோக்கி,
எந்த மதமென்று படிவத்தில் எழுதுவது?
"மதம் எதுவுமில்லை என்று எழுதுங்கள்"
ஜாதி?
"அதே பதிலை எழுதுங்கள்"
தலைமையாசிரியர் தனது இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தவாறே, சற்று கவலையோடு,
"நாளை அவன் வளர்ந்த பின் அவனுக்கொரு மதம் தேவையாயிருந்தால் என்ன செய்வது?" என்றார்.
"அவனுக்கு என்ன மதம் தேவையாயிருக்கிறதோ அதை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்ற பதில் வந்தது பெற்றோரிடமிருந்து!
-------------------
இதனைப் படித்ததில் எனது மன ஓட்டங்கள்:-
படிக்கையில் கேள்விகளையும் சிந்திப்பதற்கான தேவையையும் ஏற்படுத்துவதாக இருக்கும் இந்தப் பள்ளிப் பாடம் பிள்ளைகளுக்கான ஒரு நிச்சயத் தேவையென்பது எனது எண்ணம், நேரடி தீர்வுகளையோ கருத்துக்களையோ திணிக்காமல், சிந்தனைக்கும் மன நேர்மைக்கும் ஒரு கேள்வியாகத் தான் இந்தப் பாடத்தின் விளைவு இருக்குமென்பது எனது கருத்து!
கேரளாவில் இடதுசாரி அரசு நடத்திக் கொண்டிருக்கின்றது, அவர்களின் உந்துதலால் இந்தப் பாடம் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.
மதங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பதால் இதை எழுதியிருக்கிறார்களென்று, இதனை எதிர்த்து இந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவ அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கொடியுயர்த்தியுள்ளன. நிற்க.
காவி மோகத்திலும் தாக்கத்திலும் புத்தகங்களையும் வரலாற்றையும் மாற்றி எழுத நினைத்ததை ஒப்பிடுகையில், இங்கே உங்கள் முன் கேள்விகள் வைக்கப்படுகின்றன, பதிலுக்கு கொஞ்சம் யோசிக்க மட்டும்தான் வேண்டும்,
அதற்கு நாடு தயாராய்த்தான் இருக்கிறது என்பது எனது எண்ணம்!
இந்தப் பாடப் புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள கருத்து புதிதல்ல என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்.
1) பலகாலம் முன்னே ஓஷோ இதைப் பற்றிப் பேசியுள்ளார்,
"தேர்தலில் ஓட்டுப் போட்டு தலைமையைத் தெரிந்தெடுப்பதற்கு உங்களுக்கு ஒரு வயது வரம்பு தேவைப்படுகிறது, வாழ்க்கையில் உங்கள் நடைமுறையைத் தேர்ந்தெடுப்பதை மட்டும் ஏன் குழந்தையிலேயே அறியா வயதிலேயே இது தான் உனக்கு மதமென்று சொல்லிக் கொடுத்து பிஞ்சில் இன்ன மதம் நீயென்று பதிக்கிறீர்கள்? ஏன் அவர்களுக்கு எல்லா மதங்களையும் சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர்ந்த பின் அவர்களாகவே தான் இன்ன மதமென்று தேர்ந்தெடுத்துகொள்ளலாமே? சில ஆண்டுகாலம் உங்களை ஆளப்போவது யாரென்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு வயது வரம்பும் தெளிவும் தேவை, வாழ்க்கை முழுவதும் உங்களை வழிகாட்டப்போகும் சிந்தனைக்கு தேவையில்லையா?"
2) கலீல் கிப்ரான் குழந்தைகள் பற்றிய கவிதையில்,
"உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், கருத்துக்களை அல்ல, அவர்களின் கருத்துக்களின் மூலமாகவே வளரட்டும், அவர்களின் உடலை நலனை காத்துக்கொள்ளுங்கள் அவர்களின் சிந்தனைகளை அல்ல, அவை நாளையின் வீட்டில் வளரட்டும்!" ; கிப்ரான் மட்டுமல்ல இந்தக் கருத்து பல காலமாகவே புழங்கிவருவதுதான், இப்போதுதான் பாடப் புத்தகத்தில் வந்திருக்கிறது!
3) சில காலம் முன் நடிகர் கமல் தனது பிள்ளைகளை சென்னையில் பள்ளியில் சேர்க்க முயலும்போது, அவர்களுக்கு "மதம் ஏதும் இல்லை" எனப் பதிய முயன்றதில் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்,
அது போன்ற நிகழ்வினைத் தான் இந்த பாடம் காட்டுகிறது. நடப்பில் நிகழ்வில் உள்ள சிரமத்தின் ஒரு பகுதியைத்தான் இந்தப் பாடம் காட்டுகிறது.
4) மதம் மாறி, சாதி மாறித் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஏன் நீங்களாகவே இருக்கலாம், அந்த சூழ்நிலையில் இந்தப் பாடம் உங்களின் அன்றாடக் கேள்வியாகவே இருக்கும், இருந்திருக்கும். கேரளப் பள்ளிப் பாடம் இந்தக் கருத்தை முன்னெடுத்து சமுதாய விவாதமாக கொண்டு வந்திருக்கிறது.
இன்னும் பல இதுபோல் பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம், வரவேற்கத் தக்க ஒரு நிகழ்வாகத்தான் இந்தப் பாடத்தை நான் எண்ணுகிறேன்,
நிச்சயம் இந்தியாவின் அனைத்துக் கல்வி முறைகளிலும் இந்தப் பாடம் வரவேண்டுமென்பது எனது விருப்பம்!
புத்தரின் பின்வரும் கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது,
அறிஞரென்று கருதப்படுபவர்களால் சொல்லப்படுவதாலேயே எதையும் நம்பிவிடாதே, எல்லோரும் நம்புகிறார்கள் என்பதற்காகவே எதையும் நம்பிவிடாதே, பழைய புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறதென்பதால் எதையும் நம்பாதே, கடவுள் சொன்னதென்று சொல்லப்படுவதாலேயே எதையும் நம்பிவிடாதே, வேறொருவர் நம்புவதால் எதையும் நம்பிவிடாதே, உன்னால் ஆராயமுடிந்து தீர்மானிக்கக்கூடியதை மட்டுமே நம்பு!
"Buddha: Believe nothing just because a so-called wise person said it. Believe nothing just because a belief is generally held. Believe nothing just because it is said in ancient books. Believe nothing just because it is said to be of divine origin. Believe nothing just because someone else believes it. Believe only what you yourself test and judge to be true.
"
ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை, வழிமுறையைத் தான் இந்தப் பள்ளிப் பாடம் தருகிறது!
-------------------------------
தொடர்பான இணையத் தொடுப்புகள்:-
http://www.hindu.com/2008/06/26/stories/2008062655381100.htm
http://krgopalan.blogspot.com/2008/06/jeevan-casteless.html
http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEO20080625010238&Page=O&Title=Thiruvananthapuram&Topic=0
http://www.katsandogz.com/onchildren.html
3 comments:
Arumaiyana pathivu! Vazhthukkal!
மிகவும் தேவையான பதிவு நன்றி.
//நிச்சயம் இந்தியாவின் அனைத்துக் கல்வி முறைகளிலும் இந்தப் பாடம் வரவேண்டுமென்பது எனது விருப்பம்!//
கட்டாயம் வர வேண்டும்.
ப்ரியா உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
'Anonymous" - நிச்சயம் வரும், எவ்வளவு சீக்கிரம் என்பதுதான் கேள்வி.
Post a Comment