Monday, November 24, 2008

காதலென்பதில்லாத நாளொன்றில்....


காதலென்பதில்லாத நாளொன்றில்...




சிறு பிள்ளையாய் இருந்தக்கால்
பள்ளியருகே ஆலமரத்தின்
விழுதுகள் பிடித்து
விளையாடிச் சென்ற நாட்கள்
இன்றும் கண்களுக்குள் மறையாமல்.

ஏரித் தண்ணீரில்
எல்லோரும் நீந்துகையில்
கரையருகே குளித்தவாறே
தலையெண்ணியிருந்த நாட்களை
எண்ணுகையில் உள்ளமெல்லாம் ஈரமே.

நேற்றின் பசிய எண்ணங்கள்
ஏக்கமா, பாசமா? காதலும்தானே?
எண்ணிப் பார்க்கையில்
எல்லா நாட்களுமே
காதலில் நிழல் கண்டிருந்திருக்கின்றன.

அன்னையின் பாசம் காதலே
தந்தையின் அன்பு காதலே
உடன்பிறப்பின், உறவின் பரிவும் காதலே
கற்பித்தவனின் கண்டிப்பும் காதலே
கண்டு மனம் கொண்டவளின் மணமும் காதலே.

நட்பின் சேர்க்கையெல்லாம் காதலே
பிள்ளையின் ஏக்கமும் காதலே
நிராகரிக்கப்பட்ட கணங்களும்
தராமல் மறைக்கப்பட்ட காதலே
வெற்றியின் வருடலும்
தோல்வியின் தழுவலும்
காதலல்லாமல் வேறென்ன?

இந்தக் காதலென்பது
இல்லாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்?
யோசித்துப் பார்க்கிறேன்.
நிச்சயம் அந்த ஆலமரத்திற்கு
விழுதுகளில்லாமல் போயிருக்கும்.

இந்தக் காதலென்பது சிலருக்கு
சிறகு விரிக்காத நாளொன்றில்
மண்ணில் மனிதர் பலர்
மழலை மறந்திருப்பர்,
நிதானம் இல்லாது போயிருப்பர்,
பிள்ளைத்தனம் இழந்துபோய் கல்லாயிருப்பர்,
பணம் சுவாசத்தை வழிநடத்தும்,
துப்பாக்கிகளே புத்தகங்களாயிருக்கும்.

ஏன்
இன்று போல் இருந்திருக்குமோ?

10 comments:

Anonymous said...

//
நிராகரிக்கப்பட்ட கணங்களும்
தராமல் மறைக்கப்பட்ட காதலே
//
வெருப்பைக் கூட தராமல் மறுக்கப்பட்ட காதல் என்ற உங்கள் சிந்தனை வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு வகையில் அதுவும் சரிதான்.

நம்பி.பா. said...

நன்றி நிலொபர், 'நிராகரிக்கப்பட்ட கணங்கள்' கோபத்தையும்,வலியையும் தந்தது ஒரு காலம் என்ற உண்மையையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவன் said...

//நிராகரிக்கப்பட்ட கணங்கள்' கோபத்தையும்,வலியையும் தந்தது ஒரு காலம் என்ற உண்மையையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்//

நம்பி, இத்தனை நாளா எனக்கு இது தெரியாம போயிடுச்சே!..

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

நம்பி.பா. said...

நன்றி 'SP.VR. SUBBIAH' உங்கள் வார்த்தைகளுக்கு.

வாங்க 'இவனே', உங்க கண்ணுல இது சிக்காம போயிடுச்சா? அது எப்படி?

Anonymous said...

'''சிறு பிள்ளையாய் இருந்தக்கால்
பள்ளியருகே ஆலமரத்தின்
விழுதுகள் பிடித்து
விளையாடிச் சென்ற நாட்கள்
இன்றும் கண்களுக்குள் மறையாமல்.'''

எங்கள் ஊர் ஆலமரத்தடி ஞாபகங்களைத் தந்த வரிகள். ஊர் பிரிந்து புலம்பெயர்ந்து வந்த பின்னாலும் மனசை விட்டு அழியாத ஞாபகமாய் ஆலமரமும் அதனடியில் விளையாடில ஞாபகங்களும்.

வாழ்த்துக்கள்.

சாந்தி

நம்பி.பா. said...

நன்றி சாந்தி உங்களின் வருகைக்கு, இங்கேயும் அதே சிந்தனைகள்தான், பள்ளி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அந்த ஆலமரம் நாங்கள் ஏறாத நாட்கள் மிகவும் குறைவே!

Priya said...

நான் கண்ட காதலை மாறுபடுத்தும்
மிக அருமையான கவிதை காதலுக்கு அழகான வர்ணம்
பூசிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.....


அன்பு பாசம்
பரிவு பிரிவு
கோபம் தாபம்
நட்பு ஏக்கம்
வெற்றி தோல்வி
எல்லாம் காதலென்றால்

இரு மனம் கூடி
மாங்கல்யம் தான் பூண்டு
உள்ளதோடு அதன் உணர்வோடு
உறவாட கைபிடித்து
உனெக்கென நானென்றும்
எனக்கென நீயென்றும்

வாய்மொழி கூறாமல்
வாழ்ந்திருக்கும்
என் உறவுக்கு என்னென்று
பெயர் சூட்ட....

மேல் கூறியது பொல்
அன்னையின் -- பாசம்
தந்தையின் -- அன்பு
உறவின் -- பரிவு
கற்பித்தவனின் -- கண்டிப்பு
சேர்கையின் -- நட்பு
பிள்ளையின் -- ஏக்கம்
பகைவனின் -- கோபம்
வெற்றியின் -- வருடல்
தோல்வியின் -- தழுவல்

என தனித்தனி பெயர்கொடுக்க
இது அத்துனையும் சேர்ந்து
கண்ட என் உறவுக்கு

எனக்கென கிடைத்த
நான் மட்டும் கொண்ட
இந்த உறவுக்கு...

என் வாழ்கை... என்று போய்
நம் வாழ்கை... என்று உணர
வைத்த என் உறவுக்கு மட்டும்

பெயர் சூட்டினேன்
நான்
காதல் என்று.....

இப்படிக்கு,
ப்ரியாகணெஷ்

Priya said...

நான் கண்ட காதலை மாறுபடுத்தும்
மிக அருமையான கவிதை காதலுக்கு அழகான வர்ணம்
பூசிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.....


அன்பு பாசம்
பரிவு பிரிவு
கோபம் தாபம்
நட்பு ஏக்கம்
வெற்றி தோல்வி
எல்லாம் காதலென்றால்

இரு மனம் கூடி
மாங்கல்யம் தான் பூண்டு
உள்ளதோடு அதன் உணர்வோடு
உறவாட கைபிடித்து
உனெக்கென நானென்றும்
எனக்கென நீயென்றும்

வாய்மொழி கூறாமல்
வாழ்ந்திருக்கும்
என் உறவுக்கு என்னென்று
பெயர் சூட்ட....

மேல் கூறியது பொல்
அன்னையின் -- பாசம்
தந்தையின் -- அன்பு
உறவின் -- பரிவு
கற்பித்தவனின் -- கண்டிப்பு
சேர்கையின் -- நட்பு
பிள்ளையின் -- ஏக்கம்
பகைவனின் -- கோபம்
வெற்றியின் -- வருடல்
தோல்வியின் -- தழுவல்

என தனித்தனி பெயர்கொடுக்க
இது அத்துனையும் சேர்ந்து
கண்ட என் உறவுக்கு

எனக்கென கிடைத்த
நான் மட்டும் கொண்ட
இந்த உறவுக்கு...

என் வாழ்கை... என்று போய்
நம் வாழ்கை... என்று உணர
வைத்த என் உறவுக்கு மட்டும்

பெயர் சூட்டினேன்
நான்
காதல் என்று.....

இப்படிக்கு,
ப்ரியாகணெஷ்

நம்பி.பா. said...

பிரியா,
நன்றி வருகைக்கும் நல்ல கவிதை மறுமொழிக்கும்.

இந்தக் கவிதையின் கருத்துக்கு இன்னொரு பரிமாணத்தை காட்டியிருக்கீங்க.