Friday, February 16, 2007

தலைகீழ் உலகம் - ஒரு மாறுபட்ட பார்வை!



வானம் மேலே, பூமி கீழே!! எத்தனை பொய்யான ஒரு கருத்து,
பூமிக்கு வெளியே காற்று மண்டலம் தாண்டி உயரே சென்றால்,
கண்முன்னே பூமியும் உயர்ந்து நிற்கிறதென்பதை நம் அறிவியல்
உலகம் ஏற்கனவே கண்டுவிட்டது. ஆனாலும் நாளுக்கு
ஒருமுறையேனும், வானம் மேலே, பூமி கீழேயென
நாம் சொல்வது இன்னமும் நிற்கவில்லை!




மேலொன்றும் கீழொன்றும் (ஆகாயத்தில்) இல்லையென்பது
மனிதர்களுக்கு இன்னும் மனதில் பதியாத ஒன்றாய்த்தான் இருக்கிறது.

அறிவியல் வளர்வதற்கு முன்னர் எத்தனை தவறான
கருத்துக்கள், சிந்தனைகள்! பூமியை சூரியன் சுற்றி வந்ததென்பதும்,
பூமியைச்சுற்றியே வான்கோள்கள் இருந்ததென்றுமிருந்த
தவறான நம்பிக்கைகள்! வான்வெளி அறிவியல் அனைத்தையும்
தலைகீழாய் மாற்றிப் போட்டுவிட்டது!

உலகம் என்னும் பந்து, வடக்கென்பதும் தெற்கென்பதும் மனிதன்
வழிகாட்டுவதற்கும், பயன்பாட்டு எளிமைக்கும் கொடுத்த திசைகள்,
அதில் வடக்கு மேலே இருக்கிறதென்பதுவும், தெற்கு கீழே
இருப்பதென்பதுவும், கற்பிதமென்ற கருத்துடன் தலைகீழாய்
வரையப்பட்ட உலகத்தின் வரைபடம் ஒன்றைக் காண
வாய்ப்புக் கிடைத்தது! மிகவும் வியப்பாய்
சிந்தனைக்கு கேள்வியாய் (விருந்தாய்) இருந்தது அந்த வரைபடம்,
வடக்கை மேல்புறமாயும் தெற்கை கீழ்புறமாயும் கொண்டே
உலகப் படத்தைப் பார்த்துப் பழகிய கண்களுக்கும் சிந்தனைக்கும்
பெருங்கேள்வியைத் தருகிறது இந்தப் படம்.



எப்போதும், அடியிலிருக்கும், ஆஸ்திரேலியாவை மேலே வைத்த
இந்தப் படம் நீராலானது உலகமென்பதை தெளிவாய் காட்டுகிறது.

இந்தப் படம் 1979 முதல் இருந்துவருகிறதென்பதும்
புதிய தகவலாய்த் தான் இருக்கிறது!


கடந்த சில நூற்றாண்டுகளாய்த் தான், உலகின் வடபகுதியை
மேல்புறமாகவும் தென்பகுதியை கீழ்ப்புறமாகவும் வைத்து
உலக வரைபடங்கள் வந்திருக்கின்றன. அதற்கு முன்பாக,
கிழக்கை மேலே வைத்த உலகப்படங்களை அராபியர்களும்,
தெற்கை மேலே வைத்த படங்களை சீனர்களும்,
இந்தியர்களும்(?) பயன்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

கேள்விகளின்பாற்பட்டது வாழ்க்கை,
மாற்றுக் கருத்துக்களின்பாற்பட்டது முன்னேற்றம்,

இந்த மாறுபட்ட உலகப் படம் மனதை யோசனைகளின்பால் செலுத்துகிறது.

தொடர்புடைய தொடுப்புகள்:

http://www.odt.org/NewMaps.htm#Mcarthur
http://flourish.org/upsidedownmap/
http://www.gisnet.com/notebook/unusual.htm




No comments: