மழைக்கால மாலை
ஈரமாய் கண்முன் சாலை;
ஓரத்து பெருங்கட்டிடத்திலிருந்து
நாளின் வேலை முடித்து
இழந்ததைத் தேடி
வீட்டுக்கு ஓடும் நபர்கள்,
சாரிசாரியாய் கார்கள் சாலையில்!
பாதை நெரிசலை
கண்ணுக்குள் சுமந்து
பொழுதை முடிக்க
வீட்டுக்குள் செய்ய வேண்டியனவற்றை
தலைக்குள் சுமந்து
எப்போதும் போல்
அரைகுறை கவனத்துடன்
சாலையில் பயணம்!
அழுக்கான உடையோடு
குளித்துப் பல நாளாகி
சேறும் சகதியும் மேலாக்கி
வீதி ஒரமாய் பிச்சையெடுக்கும்
முகந்தெரியாத மனிதன் இருப்பதுவும்
அவன் பசியும் மனத்தேவையும்
பலருக்கும் தெரியவில்லை!
பலருக்கும் தெரியவில்லை
சாலையின் ஓரங்களில்
மழையில் நனைந்து
புதிதாய் முகம் காட்டும் மரங்களை!
எங்கே தெரியப்போகிறது
பள்ளி வாசலில்
காத்து நிற்கும் மழலையின் மனமும்,
வீட்டு வாசலில்
பூத்து நிற்கும் மலரின் முகமும்?
தன்னை மறந்ததாய்
ஒரு வேலை, வாழ்க்கை;
முன்னில் இருப்பவரும்
கண்ணுக்குத் தெரிவதில்லை!
படர்க்கையை மறந்துதான்
நாளும் உறக்கமும்;
நேரங்களில் நம் முகமே
நமக்கு அந்நியமாய்;
மெட்ரோ நெரிசலில்
சிக்கிய கார்கள் நகர்வதுபோல்
மனிதத்தையும் நகர்த்துகிறோம்!
---------------------------------------------------------------------------------------
விக்கியின் படி ரெட்ரோ:- http://en.wikipedia.org/wiki/Retro
----------------------------------------------------------------------------------------
படர்க்கை - தமிழ் இலக்கணத்தின்படி, தன்னிலை முன்னிலை தவிர்த்த
மற்றவர்களும், மற்றனவும் படர்க்கை ஆகும்,
ஆங்கில இலக்கணத்தின்படி தேர்ட் பர்சன்(third person)
--தன்னிலை - தன்னைப் பற்றிய
--முன்னிலை - முன்னே இருப்பவரைப் பற்றிய
----------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment