Tuesday, November 13, 2012

வாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்!


தீபாவளி வாழ்த்துக்கள்!!

சிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடைக்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.

தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக சதுர்த்தியென நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதை கொண்டாடும் விதமாக, வடக்கில் இராமன் இராவணனை வென்று தனது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை மகிழ்ந்து கொண்டாடும் விதமாக, மேற்கில் காளியை வணங்கும்விதமாக, இலட்சுமியை வணங்கும்விதமாக, புத்தாண்டுத் தொடக்கமாக, இன்னமும் பலவிதமான காரணங்களுடன் இந்து மதத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தில் மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீக்கியமதத்திலும் அவர்களது ஆறாவது குரு 'குரு ஹர்கோபிந்த்' சிறையிலுருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறுமாறும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இவையனைத்திலும் பொதுக் கருத்தாக, தீயனவற்றை நீக்கி நல்லனவற்றை முன்னிறுத்தும் அடிப்படைக் கருத்தில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை கால முடிவை முன்னிறுத்துமாறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குளிர்காலத்தின் துவக்கத்தை நினைவுறுத்துமாறும், குவியும் இருளினைப் போக்கி ஒளிதர, விளக்குகளை ஏற்றியும், ஒளி/ஓலி தரும் பட்டாசுக்களை கொளுத்தியும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைப் போன்றே, உலகின் மற்ற கலாச்சாரங்களிலும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இதே கருத்தையொட்டி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இங்கே அமெரிக்காவில் மிக பெரிதாக இன்று கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையின் அடிப்படைக் கருத்தும், கொண்டாடப்படும் காலமும் இதுவே. இந்த ஹாலோவீன் பண்டிகையின் மூலமாக பழைய பேகன் மற்றும் செல்டிக் கிரேக்க ஷாமன் பண்டிகைகளான 'முன்னோர் வழிபாடும்' கிட்டத்தட்ட இதே விதமாக, தீயனவற்றை நல்லவை வெல்லும் கருத்தோடும், ஒளியூட்டியும் கொண்டாடப்படுகிறது. இவையெல்லாமும் அறுவடை கால முடிவை முன்னிறுத்தமாறும் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

இந்த சிந்தனையை இன்னமும் கொஞ்சம் நீட்டித்தால், எனது பாட்டனாரின் நினைவுப்படி, தமிழகத்தில் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையே அல்ல, பொங்கல் மட்டுமே மக்கள் பண்டிகையாக, அறுவடைப் பண்டிகையாக இருந்தது. மேலும், போகித் திருநாளின் அடிப்படைக் கருத்து கிட்டத்தட்ட இந்த தீயன கழிந்து நல்லன சேர்த்தல்தான், இன்னமும் சொல்லப்போனால், அது பழையன கழிந்து புதியன புகுதலெனும் முதிர்ந்த கருத்தாகவும், நல்லன கெட்டனவென பாகுபடுத்தாமலும் இருக்கும் அடிப்படையில் பண்பட்ட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வழியிலானது!

பண்டிகையின்பாற்பட்ட உற்சாகமும், புத்தாடை, பட்டாசுகளும், திண்பண்டங்களும் உருவாக்கும் ஒளிர்ந்த சிந்தனை எல்லார்க்கும் மகிழ்ச்சி தருவதே, அவையே இந்த பண்டிகைகளை மிகவும் கொண்டாடத்தக்கவையாக மாற்றுகின்றன, அவையே பண்டிகைகளை மேலும் கூட்டுகின்றன.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

http://en.wikipedia.org/wiki/Diwali

http://en.wikipedia.org/wiki/Samhain

http://en.wikipedia.org/wiki/Halloween

Tuesday, April 28, 2009

காதலின் நீண்ட விழியசைப்பில்



காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.

எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.

காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.

புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.

பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.

அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.

கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.


மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.


எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!

Friday, April 17, 2009

பூக்களின் பாதையில் புன்னகைக்க மறந்த விழிகள்...

ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்
அழியாத விளக்கென்பதுவும் பொய்,
மாற்றமென்பதே ஒரே மெய்.

மாற்றத்தின் பாதையில்
ஏமாற்றத்தின் சுவடுதனை
மெல்ல நுழைக்கும்
பொய்யான வாக்குறுதிகள்
பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,

தேவைகளுக்கான
விளக்கங்களும் மாறி இருக்கும்.

மாற்றம் பொய்யிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.

அன்று பூக்களின் பாதையில்
புன்னகைக்க மறந்த விழிகள்
பொய்யாய்ப் போய்விடும்.

அலையடித்த கரையில் நிற்கும்
நுரைத்த மணலாடாத கால்கள்
பொய்யாய்ப் போய்விடும்.

மாற்றத்தின் தேவையையும்
உணர மறுக்கும்
ஏமாற்றச் சிந்தனைகளை
விலக்கக் கற்றுக் கொண்டால்
பிரிந்திருக்கும் மாடுகள் கூடக்கூடும்.
அவை கூடி நின்றால்
வாடிய வயிறுகளுக்கும் உணவு கிட்டும்;

ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையுமே
சிந்தனையில் ஏந்தி ஏந்தி
மழுங்கிய மூளைகளுக்குள்
முட்களும் மலரும்.
குனிந்த முதுகுகள் நிமிரும், நிமிர்ந்தால்
முட்டிய கட்டைகளும் முறிந்து போகும்;

அப்போது மாற்றம் விதியிற்கான
மாற்றமாக இருக்காது
மனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.
விதிப்பயனுக்கான
விளக்கமும் மாறி இருக்கும்.

ஏற்கனவே எழுதியது:-
விதியும் வாழ்வின் விதையும் - http://vaigaraivaanam.blogspot.com/2008/09/blog-post.html