Friday, July 13, 2007

ஆனந்தக் களி நடம் - அன்புடன் போட்டிக்கான கவிதை முயற்சி-1

ஓரிரு மாத இடைவெளிக்குப் பின் எழுத
நேரம் கிட்டியிருக்கிறது, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த
"அன்புடன்" குழுவினர் நடத்திய கவிதைப் போட்டியில்
இரு படங்களுக்காக நான் எழுதிய கவிதைகள் இதோ!



எனது கவிதைகள் பரிசுப் பட்டியலில்
இடம்பெறவில்லையெனினும், மிகச்சிறந்த கவிதைகளுக்கு
அளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி!


போட்டியை திறம்பட நடத்தி, முக்கியமாக, நேரத்தையும்
சிந்தனையயும் பயனுற செலவிட்டு, போட்டிகளை
நடத்திய குழுவினருக்கு எனது நன்றி! வாழ்த்துக்கள்!


இரு படங்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளில்
முதலாவது! கவிதைக்கான படமும் இணைத்துள்ளேன்.


ஆனந்தக் களி நடம்
---------------------------
இந்தச் சிறுமியின்

கண்களில் எத்தனை நட்சத்திரங்கள்,
காலையின் வெளிச்சம்
இவளின் முகத்தில் பிரகாசமாய்.

ஆடையின் வண்ணங்கள்
ஆனந்தம் தவிர வேறேதும் பேசவில்லை!
பார்வையின் கவர்ச்சி காட்டுது
அப்பழுக்கற்ற உண்மையை!

அமைதியின் பார்வை
இவளின் பார்வை;
ஆனந்தக் களிநடம்
இவளின் முகம்;

அலையறு நடுக்கடலின் அமைதி
இந்த முகத்தைக் காணக் காண!
இவள் காலங்கள் கடந்த
நம் கலாச்சாரத்தின் வடிவமா?
பூக்கள் தோற்கும்
இந்த மழலை முகம் கண்டு!
வாடாமல் காப்பது
உலகின் கடமையன்றோ?


குழையும் மனது
மழலையின் வெகுளிப் புன்னகையில்,
இது புன்னகையா? சிரிப்பா?
கேள்வியில் மயங்குதென் மனம்!
---------------------------14 ஏப்ரல் 2007------

Sunday, February 18, 2007

அருகில் வராதே!

அருகில் வராதே!

கைகோர்த்து கரை நடந்து
கால் நனைந்தது போதாதென்று
மழை கொண்டு
முழுதாய் நனைந்தது
நிழலாடுது நெஞ்சிலின்றும்!

நாட்களென்னவோ வரிசையாய்
நாட்காட்டியிலிருந்து
குப்பைத் தொட்டிக்கு;

நீயென்னவோ இன்னமும்
கண்ணுக்கு கானலாய்தான்!

காதலில் பிரிவென்னும் துயரன்றி
பெருந்துயர் வேறேது?
தென்றலாய் உடனிருந்தபோது
பற்றிய தீயில்
இன்னும் எரிகிறேன்
தயவுசெய்து அருகில் வராதே!

அன்புடன்,
நம்பி. பா.

Friday, February 16, 2007

தலைகீழ் உலகம் - ஒரு மாறுபட்ட பார்வை!



வானம் மேலே, பூமி கீழே!! எத்தனை பொய்யான ஒரு கருத்து,
பூமிக்கு வெளியே காற்று மண்டலம் தாண்டி உயரே சென்றால்,
கண்முன்னே பூமியும் உயர்ந்து நிற்கிறதென்பதை நம் அறிவியல்
உலகம் ஏற்கனவே கண்டுவிட்டது. ஆனாலும் நாளுக்கு
ஒருமுறையேனும், வானம் மேலே, பூமி கீழேயென
நாம் சொல்வது இன்னமும் நிற்கவில்லை!




மேலொன்றும் கீழொன்றும் (ஆகாயத்தில்) இல்லையென்பது
மனிதர்களுக்கு இன்னும் மனதில் பதியாத ஒன்றாய்த்தான் இருக்கிறது.

அறிவியல் வளர்வதற்கு முன்னர் எத்தனை தவறான
கருத்துக்கள், சிந்தனைகள்! பூமியை சூரியன் சுற்றி வந்ததென்பதும்,
பூமியைச்சுற்றியே வான்கோள்கள் இருந்ததென்றுமிருந்த
தவறான நம்பிக்கைகள்! வான்வெளி அறிவியல் அனைத்தையும்
தலைகீழாய் மாற்றிப் போட்டுவிட்டது!

உலகம் என்னும் பந்து, வடக்கென்பதும் தெற்கென்பதும் மனிதன்
வழிகாட்டுவதற்கும், பயன்பாட்டு எளிமைக்கும் கொடுத்த திசைகள்,
அதில் வடக்கு மேலே இருக்கிறதென்பதுவும், தெற்கு கீழே
இருப்பதென்பதுவும், கற்பிதமென்ற கருத்துடன் தலைகீழாய்
வரையப்பட்ட உலகத்தின் வரைபடம் ஒன்றைக் காண
வாய்ப்புக் கிடைத்தது! மிகவும் வியப்பாய்
சிந்தனைக்கு கேள்வியாய் (விருந்தாய்) இருந்தது அந்த வரைபடம்,
வடக்கை மேல்புறமாயும் தெற்கை கீழ்புறமாயும் கொண்டே
உலகப் படத்தைப் பார்த்துப் பழகிய கண்களுக்கும் சிந்தனைக்கும்
பெருங்கேள்வியைத் தருகிறது இந்தப் படம்.



எப்போதும், அடியிலிருக்கும், ஆஸ்திரேலியாவை மேலே வைத்த
இந்தப் படம் நீராலானது உலகமென்பதை தெளிவாய் காட்டுகிறது.

இந்தப் படம் 1979 முதல் இருந்துவருகிறதென்பதும்
புதிய தகவலாய்த் தான் இருக்கிறது!


கடந்த சில நூற்றாண்டுகளாய்த் தான், உலகின் வடபகுதியை
மேல்புறமாகவும் தென்பகுதியை கீழ்ப்புறமாகவும் வைத்து
உலக வரைபடங்கள் வந்திருக்கின்றன. அதற்கு முன்பாக,
கிழக்கை மேலே வைத்த உலகப்படங்களை அராபியர்களும்,
தெற்கை மேலே வைத்த படங்களை சீனர்களும்,
இந்தியர்களும்(?) பயன்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

கேள்விகளின்பாற்பட்டது வாழ்க்கை,
மாற்றுக் கருத்துக்களின்பாற்பட்டது முன்னேற்றம்,

இந்த மாறுபட்ட உலகப் படம் மனதை யோசனைகளின்பால் செலுத்துகிறது.

தொடர்புடைய தொடுப்புகள்:

http://www.odt.org/NewMaps.htm#Mcarthur
http://flourish.org/upsidedownmap/
http://www.gisnet.com/notebook/unusual.htm