Sunday, September 3, 2023

சனாதன தர்மமும் சமகால அதர்மமும் ஒழியட்டுமே!


சனாதனமென்றால் எல்லாக் காலமும்

தர்மம் என்றால் நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான நெறிமுறை

எல்லாக் காலத்துக்குமான வாழ்முறை 


சனாதன தர்மம்

நான்மறையிலில்லா வார்த்தை 

சனாதன தர்மம்

சமஸ்கிருதத்துக்குச் சொந்தமில்லா வார்த்தை


புத்தன் பேசிய பாலி மொழி வார்த்தை

தம்மோ சனாதன

புத்தனுக்கு முன்னே அவனி்ன் நிலத்தில் 

பலரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை

தம்மோ சனாதன


காலத்தின் கடத்தலில்தம்மோ சனாதன

சனாதன தர்மமாகிறது

நெறி மாற்றப்பட்டு கருத்து மாற்றப்பட்டு

சமஸ்கிருதமும்இந்துமதமும்

சொந்தம் கொண்டாடும் வார்த்தையிது


புத்தன் நல்வாழ்வு வழி

அன்பு அறநெறி தாங்கியவன்

மனக்கடலின் அலைகளை வென்றவன்

வார்த்தைகளை உருவாக்கியவனல்லன்

மொழியைத் தாங்கியவனல்லன்


வாழ்க்கையை குழப்பத்தின் வழியிலிருந்தும்

கடுங்கட்டுப்பாட்டுப் பிடியிலிருந்தும் விலக்கி

எளிமையின் பாதைக்கும்

அமைதியின் பாதைக்கும் 

கொணர முயன்றவன் புத்தன்


உண்மை மற்றும் அன்பின் வழியையே

எக்காலத்திற்கான வாழ்நெறியெனும்

சனாதன தர்மமென்றான் புத்தன்


பின்னொரு காலத்தில்

சமஸ்கிருதம் அந்த வார்த்தையை வென்றது

அதன் பழம் பொருளைத் தின்றது

இன்றதைத் தாங்குவது

வெறும் அரசியல்வியாதிகள்தாம்


மனு தர்மம் நால்வர்ணம்

தூக்கிநிறுத்தும் வெறும்பேதம்

இன்றின் சனாதன தர்மம்

அழிந்து போகட்டும்

சமுதாயத்தை பிளந்துவைக்கும்

சனாதன தர்மம்

இன்றின் கேள்விகளுக்கு முன்

பொடிப்பொடியாகும்

பேதங்களே நீங்கள் போய்வாருங்கள்


கடவுளருக்கும் 

நம்பிக்கைகளுக்கும்

பிறழ் சனாதனம் தேவையில்லை

மண்ணின் மைந்தர்களை

சரிநிகர் சமானமென

கொண்டாடா சனாதனம் 

அழியட்டுமே ஒழியட்டுமே!


கதைகளுக்குத் தேவை

பொய்கள் 

திரை விலகியபின் அவையெதற்கு?

பொய்ச் சனாதன தர்மத்திற்கு

விடை கொடுப்போம்


 

Sunday, November 15, 2015

கவிதைகள் விதைகளாய்

அன்பு வணக்கங்கள்!

கொஞ்சம் கொஞ்சமாய் காதலும் கவிதையும் இன்ன பிறவும் எழுதத் துணிந்து, சில எழுதி, அவற்றை தனியொரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். என்றேனும் ஒரு நாள் ஒரு அழகிய நிகழ்வை கவிதையாய் எழுதும் முயற்சியின் துவக்கம் இது.  இந்த வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள்.   http://www.kavithai.us/

-நம்பி. பா.

Tuesday, November 13, 2012

வாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்!


தீபாவளி வாழ்த்துக்கள்!!

சிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடைக்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.

தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்!

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக சதுர்த்தியென நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றதை கொண்டாடும் விதமாக, வடக்கில் இராமன் இராவணனை வென்று தனது பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை மகிழ்ந்து கொண்டாடும் விதமாக, மேற்கில் காளியை வணங்கும்விதமாக, இலட்சுமியை வணங்கும்விதமாக, புத்தாண்டுத் தொடக்கமாக, இன்னமும் பலவிதமான காரணங்களுடன் இந்து மதத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தில் மகாவீரர் பரிநிர்வாணமடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சீக்கியமதத்திலும் அவர்களது ஆறாவது குரு 'குரு ஹர்கோபிந்த்' சிறையிலுருந்து விடுவிக்கப்பட்டதை நினைவுகூறுமாறும், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இவையனைத்திலும் பொதுக் கருத்தாக, தீயனவற்றை நீக்கி நல்லனவற்றை முன்னிறுத்தும் அடிப்படைக் கருத்தில்தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அறுவடை கால முடிவை முன்னிறுத்துமாறும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குளிர்காலத்தின் துவக்கத்தை நினைவுறுத்துமாறும், குவியும் இருளினைப் போக்கி ஒளிதர, விளக்குகளை ஏற்றியும், ஒளி/ஓலி தரும் பட்டாசுக்களை கொளுத்தியும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையைப் போன்றே, உலகின் மற்ற கலாச்சாரங்களிலும் கிட்டத்தட்ட இதே நேரத்தில் இதே கருத்தையொட்டி அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத் துவக்கத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

இங்கே அமெரிக்காவில் மிக பெரிதாக இன்று கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையின் அடிப்படைக் கருத்தும், கொண்டாடப்படும் காலமும் இதுவே. இந்த ஹாலோவீன் பண்டிகையின் மூலமாக பழைய பேகன் மற்றும் செல்டிக் கிரேக்க ஷாமன் பண்டிகைகளான 'முன்னோர் வழிபாடும்' கிட்டத்தட்ட இதே விதமாக, தீயனவற்றை நல்லவை வெல்லும் கருத்தோடும், ஒளியூட்டியும் கொண்டாடப்படுகிறது. இவையெல்லாமும் அறுவடை கால முடிவை முன்னிறுத்தமாறும் கொண்டாடப்படுவது கவனிக்கத்தக்கது.

இந்த சிந்தனையை இன்னமும் கொஞ்சம் நீட்டித்தால், எனது பாட்டனாரின் நினைவுப்படி, தமிழகத்தில் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையே அல்ல, பொங்கல் மட்டுமே மக்கள் பண்டிகையாக, அறுவடைப் பண்டிகையாக இருந்தது. மேலும், போகித் திருநாளின் அடிப்படைக் கருத்து கிட்டத்தட்ட இந்த தீயன கழிந்து நல்லன சேர்த்தல்தான், இன்னமும் சொல்லப்போனால், அது பழையன கழிந்து புதியன புகுதலெனும் முதிர்ந்த கருத்தாகவும், நல்லன கெட்டனவென பாகுபடுத்தாமலும் இருக்கும் அடிப்படையில் பண்பட்ட 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' வழியிலானது!

பண்டிகையின்பாற்பட்ட உற்சாகமும், புத்தாடை, பட்டாசுகளும், திண்பண்டங்களும் உருவாக்கும் ஒளிர்ந்த சிந்தனை எல்லார்க்கும் மகிழ்ச்சி தருவதே, அவையே இந்த பண்டிகைகளை மிகவும் கொண்டாடத்தக்கவையாக மாற்றுகின்றன, அவையே பண்டிகைகளை மேலும் கூட்டுகின்றன.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

http://en.wikipedia.org/wiki/Diwali

http://en.wikipedia.org/wiki/Samhain

http://en.wikipedia.org/wiki/Halloween