Tuesday, August 28, 2007

வேலூர் தங்கக் கோயிலும் தமிழர்களின் பொறுப்பின்மையும்!

அண்மையில் படித்த செய்தி:-
வேலூர் அருகே அரியூர் மலைக்கோடியில் 100 ஏக்கர் பரப்பில் 300 கோடி செலவில் 1500 கிலோ தங்கத்தால் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு லட்சுமி நாராயணி கோயில் என பெயரிடப்பட்டுள்ளது. இது நாராயணி அம்மா என்றும் சக்தி அம்மா என்றும் அழைக்கப்படும் 31 வயதான சாமியார் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது.

கடவுளின் பெயரால்:-
பக்தி என்பது அறிவா? அறிவின்மையா? உணர்வா? விளம்பரமா? கண்மூடித்தனமா?
பக்தி என்பது கடவுளின் பாற்பட்டதா? பெருமையின்பாற்பட்டதா?
என்ற கேள்விகளுக்கு தமிழக மக்களுக்கு வேலூர் சாமியார் தந்திருக்கும் பதில்தான் இந்தத் தங்கக்கோயில்! ஏன் ஒட்டுமொத்த தமிழகமும் பக்தி என்றால் என்ன என்பதை இன்னொரு முறை திரும்பப் பரிசீலிக்க வேண்டிய வெட்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுதான் இந்தத் தங்கக்கோயில்!


கடவுள் தங்கத்தை எதிர்பார்க்கிறாரா? சாமியார் இந்தப் பெருமையை எதிர்பார்க்கிறாரா? வியாபாரிகளின் விளம்பரங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? வழிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்க வேண்டியவர்களின் இன்னுமொரு பொறுப்பற்ற செயலாய்த்தான் இந்தக் கோயில் எனக்குத் தெரிகிறது!

மக்களுக்கு வழிகாட்டலாம், பலர் வயிற்றுப் பசியைப் போக்கலாம், சிலரின் வறுமையாவது போக்கலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இதுபோன்ற வெட்கங்கெட்ட செயலை செய்யலாமா?

300 கோடியில் 31 வயது சாமியார் ஒருவரால் கட்டப்பட்டது என்பதைத் தவிர கட்டிய காசுக்கு கணக்கு யாருக்கும் தெரியப் போவதுமில்லை, இதில் சமுதாயப் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதுவும், சமுதாயத்திற்கு பயன் எதுவாக இருக்கும் என்பதும் யாரும் யோசிக்கப் போவதுமில்லை!

ஒரு ஒப்பீட்டுக்காக:-
2007-2008 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையின்படி:-
( நிதிநிலை அறிக்கையின்படியான புள்ளிவிவரம், ஒவ்வொரு பைசாவும் பொறுப்பாக கணக்கிடப்பட்டிருந்ததெனக் கொண்டால்)
1) தமிழக அரசுக்கான வருவாய் பற்றாக்குறை 101.38 கோடி, கோயிலுக்கான செலவில் இது மூன்றில் ஒரு பங்குதான்!
2) வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் 50000 பேருக்கான தொழிற்பயிற்சி அளிப்பதற்கான செலவினம் 8 கோடி ரூபாய்!
3) அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு தேவையான தொகை 350 கோடி ரூபாய்!
4) அரசு சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான செலவு 100 கோடி ரூபாய்! மூன்று கல்லூரிகள் கட்டுவதற்கான செலவுதான் 300 கோடி ரூபாய்!


உங்களுக்கு அரசாங்க நிதிநிலை அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லையென்றால், 300 கோடி ரூபாய் கொண்டு மக்களுக்கு பயன்படத்தக்கன என்னவெல்லாம் செய்யமுடியும், எத்தனை பேரின் பசியை துயரைப் போக்க முடியுமென்பதை யோசித்துப் பாருங்கள், பதில் உங்களுக்கே நன்றாய் தெரிந்திருக்கும்!

குறைந்தபட்சம் இந்தப் பணத்திற்கான நேர்மையான கணக்கு அளிக்கவாவது அந்த சாமியாரும் அவரைச் சார்ந்தவர்களும் முன்வருவார்களா?

மக்களின் வழிபாட்டுத்தலமென்ற பெயரால் செய்யப்பட்டிருக்கும் சமுதாயப் பொறுப்பற்ற இந்தச் செய்கையை எண்ணி வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன்!

எல்லா மதங்களிலும் இதுபோன்று பொறுப்பற்ற விதத்திலும், மூட நம்பிக்கைகளிலும் வீணாக்கப்படும் பணத்தை, உலகின் பசி போக்கிடப் பயன்படுத்த மக்கள் முன்வருவார்களா?


=========================================================

கோயில் கட்டப்பட்டது தொடர்பான இணையத் தகவல்கள்:-
http://www.andhimazhai.com/news/viewmore.php?id=5575 http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_23.html
http://www.rediff.com/news/2007/aug/24gold.htm

தமிழக அரசின் 2007-2008க்கான நிதிநிலை அறிக்கை குறித்து:- http://www.tn.gov.in/budget/budget2007_08_t_highlights.pdf